புதன், 10 நவம்பர், 2010

கோண்டிமொழியும் மாவோயியமும்

நட்பு இணைய இதழில் வந்த திரு குணசேகரனின் கட்டுரையிலிருந்து : மாவோயிஸ்டுகளை பொறுத்தளவில் தவறானவர்களாகத் தெரியவில்லை. தவறான பாதையில் செல்பவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆளும், ஆளவரும், ஆளத்துடிக்கும் நம்மூர் அரசியல் இயக்கங்களை விட அவர்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் பொய்யான வாக்குறுதி எதையும் அளிப்பதில்லை. ஊழலில் திளைப்பதில்லை. ஏறெடுத்துப் பார்க்காத அரசு எந்திரங்களின் போக்கிலிருந்து மக்களைப் பார்ப்பதில் மாறுபட்டு நிற்பவர்கள். இன்னும் நிறைய கூறலாம். எனினும் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியே அவர்களின் சமூகப் பொறுப்பை மத்திய அரசே வெட்கப்படும்படி அமைந்துள்ளதை அறிந்தபோது, அணி சேராத இதழாளன் எனக்கு அவர்கள் மீது இன்னும் கூடுதலான மரியாதையை உருவாக்கியுள்ளது. ஆயுதந் தாங்கி போராடும் அவர்களின் வழிமுறைகளையும் தாண்டி சமூக பொறுப்புணர்வு மெச்சத்தக்கன. மாவோயிஸ்டுகள் கருவி தாங்கி அரசின் துணை இராணுவப் படைகளை அடிக்கடி எதிர்கொள்வது ஒருபுறம் நடந்தாலும், உள்துறை அமைச்சரே சுட்டிக்காட்டி பேசும் வகையில் அவர்கள் அரசுக் கட்டித் தந்த பள்ளிகளை இடிப்பது தொடர்பாக ஒரு தகவல் உண்டு. அவர்கள் பள்ளிக் கட்டிடங்களை தகர்ப்பது உண்மை. ஏனெனில், பயன்படாத ஒன்றைத் தாங்கள் தகர்ப்பதாகச் செய்திகள் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வாறுதான் அப்பள்ளிகள் பழங்குடி மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் உண்மை. அங்கு அரசு அமர்த்தும் ஆசிரியர்களுக்கு பழங்குடி மக்களின் மொழியில் பாடம் நடத்தத் தெரியவில்லை. அத்துடன் பள்ளிகளைக் காரணம் வைத்து வருகை தரும் அதிகாரிகளும் பழங்குடி மக்களை முகம் சுழித்து ஏளனப்படுத்துவதுபோல், பாராமுகம் காட்டுவது, அவர்களை, அவர்கள் மொழியை மதிப்பதில்லை என்பன போன்ற காரணங்களாலும், மேலும் பள்ளிக் கட்டிடத்தில் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தங்குவதற்குப் பயன்படுத்துவதாலும்தான் அதைத் தகர்ப்பதாகக் கூறுகின்றனர். இப்படித் தகர்ப்பதால் பழங்குடி மக்களின் பிள்ளைகள் கல்வி பாழாகாதா என்ற கேள்விக்கு மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர். பழங்குடிகளின் இளம் தலைமுறையினர்க்கு சிந்திக்கும் கல்வியை வழங்குவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். கல்வி வழங்குவதைக் கருவி தாங்கிய போருக்கிடையே உள்ள முக்கிய கடமை என்றும் கூறுகின்றனர். அதற்கேற்ப, சட்டீஸ்கர் வனப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பழங்குடி குழந்தைக்கும் கணிதம் – சமூக அறிவியல் – அரசியல் – பாடங்களை, கோண்டி மொழியில் தயாரான பள்ளிப் பாடநூல்களைத் தற்போது தருகின்றனர். கோண்டி மொழி என்பது தமிழ் மொழியின் கிளை மொழிகளில் ஒன்று என்பது இங்கு மிகமிக முக்கிய சேதியாகும். குறிப்பாக தமிழ் மொழிக் குடும்பத்தில் இருவகை பிரிவுண்டு. ஒன்று: இலக்கியம் படைக்கவும், இலக்கணமுள்ளதும், பேசவும் எழுதவுமான மேம்பட்ட மொழி. இரண்டு: வெறும் இனக் குழுக்களிடையே மட்டும் பேசவும், இலக்கியம் படைக்க திறனற்றதான மொழி. இந்த இரண்டு வகை மொழிக்கூட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு தனித்தனியே வரிவடிவம் அதாவது எழுத்துருக்கள் உண்டு. இலக்கணமும் உண்டு. இலக்கியங்களும் உண்டு. ஆனால் ஏனைய தமிழின் கிளை மொழிகளான தோடா, கோத்தர், படுகு, கேடகு, வர, கொலமி, நயினி, பருஹுய், பர்கி, ஒல்லரி, குய்ய, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குருக், மோஸ்ரா போன்றவற்றிற்கு பேச்சு வழக்கு உண்டே தவிர, இலக்கியப் படைப்பு இல்லை. எல்லாவற்றிலும் வாய்மொழி வழக்காறுகள் உண்டு. இதுபோன்ற கிளை மொழிகளை அவை பேசும் நிலத்தை வைத்து மொழியியலாளர்கள் வகைப்டுத்தியுள்ளனர். ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் தமிழ்மொழிக் குடும்பத்து ப்ருஹுய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், மத்திய இந்திய தமிழ்மொழிக் குடும்பத்திலுள்ளவை பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலியவை. தென்னிந்திய தமிழ் மொழிகளாக தோடா, கோத்தர், படுகு, கேடகு, வரகொலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. அதிலும் தமிழ்மொழிக் குடும்பத்தின் தொன்மையான தாய்மொழியான தமிழ் தன் கிளை மொழிகளான, அதாவது சேய் மொழியான பழங்குடி மொழி ஒன்று இத்தனை நாட்கள் இலக்கியம் படைக்க இயலாத அதன் நிலையில் மாற்றம் கண்டதென்பது பழங்குடி மொழியின் எழுச்சியாகத்தான் கருத வேண்டும். இதனால் தமிழரும் பெருமை கொள்வர். தமிழ்மொழி இயல் அறிஞர்கள் உட்பட, ஆய்வாளர்கள் அனைவரும் பேருவகைக் கொள்ளத்தக்க செயல் இது. தற்போது புத்துயிர் பெற்றுள்ள தமிழ்க் கிளைமொழியாம் கோண்டியில் அடிப்படைக் கல்வி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பழங்குடி குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொழியை அறியவும் அதனைப் பயன்படுத்தி சிந்திக்கவும் ஏராளமான கதை, வரலாறு, கலை, பண்பாடு, உயிரியல் போன்ற முக்கியப் பிரிவுகளில் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போதுள்ள எண்மின் அசைவுபடகுலுவூட்டி குறும்படங்கள் எனவும் காட்சிப் படங்களைத் தயாரித்துள்ளனராம். ஒன்று முதல் ஐந்து வரை கோண்டி மொழி கற்பித்தல் மொழி. சட்டீஸ்கரி, கோர்கு, ஹலபி, துர்குகா போன்ற இதர மத்திய இந்திய சிறுபான்மை பழங்குடி மொழி பேசும் குழந்தைகள் உட்பட தொடக்கக்கல்வி மொழியான கோண்டியில்தான் படிக்க வேண்டும். பின்னரே உயர்நிலை அறிவியல் எதிர்காலத்தை உணர்த்தும் விதமான பாடங்களை ஆறு முதல் பத்து வரை இந்தியில் கற்கவும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்
http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/mavoist.php