தமிழ்ப் பண்பாட்டின் மீது தாக்குதல்
!
இந்திய நாகரிகம்
திராவிடர்களின் பண்பாட்டால் உருவாகியது என்று கில்பர்ட் சிலேட்டர், சுனிதிகுமார் சட்டர்சி
ஆகியோர் கூறுவர். ஆரியர் திராவிடர் போராட்டம்
மூவாயிரம் ஆண்டு பழமையுடையது; இதனை இராமாயணத்திலும் காணலாம் என்று கில்பர்ட் சிலேட்டர்
கூறுவார். இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது. “பிராமணாள்” என்று பார்ப்பனர்கள்
கூறிக்கொள்வது நம்மை அவர்கள் “சூத்திரர்கள்” என்பதாகும் என்று கூறிப் பெரியார் அதனை
எதிர்த்தார். “பிராமணாள் ஓட்டல்” என்ற பெயர்ப்பலகைகளைத் தார் பூசி அழித்தார்.
கல்வெட்டு அறிஞரும் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநரும் ஆன நாகசாமி தம்முடைய ஆங்கில நூலில் (Mirror of Tamil and Sanskrit) பார்ப்பனர்களாலும் சமற்கிருதத்தாலும்தான் தமிழ் பல வளர்ச்சி நிலைகளைப் பெற்றுள்ளது. அதனால்தான் செம்மொழி
என்ற தகுதியைப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். தமிழர்களின் இலக்கியம், இலக்கணம், நீதி, கல்வெட்டு, நிர்வாகம், கலை, பண்பாடு, இசை,
நடனம் முதலிய அனைத்திலும் சமற்கிருத மொழியும் வேதமும் ஆளுமை செலுத்தின என்று எழுதியுள்ளார். அவர் கருத்துகளும்
நமது மறுப்புகளும்:
1 . “பிராமணர்களே வேதம் சமற்கிருதம் ஆகியவற்றைக் கொண்டு தமிழைத் தொடக்க காலத்திலிருந்து வளர்த்தனர்”.
மறுப்பு : மொழி என்பது தனிப்பட்டவர்களால் உருவாக்கப்படுவதில்லை; வளர்க்கப்படுவதும் இல்லை. மன்னர்களும் புலவர்களும் பொதுமக்களும் என ஒட்டுமொத்த சமுதாயமே அதன் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. பார்ப்பனர்கள் சமற்கிருதத்தைத் தங்கள் குழுமொழியாக மத அடிப்படையில் வைத்திருந்தனர்.
எனவேதான் சமற்கிருதம் எழுதப்படாததாக விளங்கிப்,
இன்றுவரை பேச்சு வழக்கற்றதாகவும் விளங்குகிறது. செய்யப்பட்ட மொழி
(சமற்கிருதம்) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் தோன்றிய செய்யப்பட்ட மொழியாகிய சமற்கிருதம் மிகத் தொன்மையான தமிழ் மொழியைத் தொடக்க காலத்திலிருந்தே வளர்த்திருக்க முடியாது. தாத்தாவைப் பேரன் வளர்த்தெடுத்தான் என்பது சரியா?
தமிழ்க்கடலாம் மறைமலையடிகளால் தனித் தமிழ்க் காலம் என்று காலவரையறை
செய்யப்பட்ட சங்க காலத்தையும் தங்கள்
காலமாக மாற்றி வரையறை செய்திட செய்யப்படும் சூழ்ச்சியே நாகசாமியின்
கூற்று. அவரால் ஆரியர் காலம் என்று வரையறை செய்யப்பட
காலத்தில் நுழைக்கப்பட்ட மணிப்பிரவாள நடை யாரால் எப்படிக் கொணரப்பட்டது என்ற வரலாறும்,
அதில் பார்ப்பனர்கள் பங்கும்,
நோக்கமும், தமிழுக்கு ஏற்பட்ட இந்த
அச்சுறுத்தலை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் எப்படி எதிர்கொண்டு
முறியடித்தார்கள் என்பதும் ஆய்ந்தால் நாகசாமியின் முகமூடி கிழியும். அவர் நம்மை
சீண்டிப் பார்ப்பதன் நோக்கமும் புரியும்.
ஆரியர் தமிழரிடமே நாகரிகத்தையும் அறிவையும்
பெற்றனர் என்று எச்.சி.வெல்சு கூறுவார்.
ஆரியர்கள் வரும்முன்னரே சிந்து வெளி நாகரிகம் சிறந்திருந்தது சிந்துவெளி எழுத்துகள்
திராவிட மொழியைச் சார்ந்தவை என்று ஈராசு குருமார் கூறுவார்.
2. “பிராமணர்கள் உருவாக்கிய பிராமி எழுத்தே தமிழ் எழுத்துகளுக்கு மூலம்”
எழுதப்படாததும் பேச்சு வழக்கற்றதும் ஆகிய சமற்கிருதம்தான் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வடதமிழி எழுத்தைக் கொண்டு எழுதப்படலாயிற்று.
“தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே
எழுதப் படிக்கத் தெரியும். ‘எழுத்து’ ‘சுவடி’
யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. (பரிதிமாற்கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு, ப.18)
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட தமிழி (தமிழ்)
கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்பதனை நன்கறிந்தவர் இந்த நாகசாமி. தமிழ் எழுத்து முறை தொடக்கத்தில் தமிழி எழுத்து முறையாக விளங்கிப் பின்னரே வட தமிழி ,தென் தமிழி எனப் பிரிந்தது. தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் வரி வடிவ எழுத்து முறை சிறந்திருந்தது. எனவே தொல்காப்பியருக்கு முன்னால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியைத் தமிழ் எழுத்துகள் பெற்றிருக்க வேண்டும் .
தமிழியை இவரைப் போன்ற திரிபுவாதிகள் அறிந்தே திட்டமிட்டுத் தமிழ்பிராமி எனக் கூறத் தொடங்கிப் பின்னர் அதையும் விட்டு விட்டு வடபிராமி தென்பிராமி எனத் திரித்து மெல்லமெல்லத் தமிழியைப் பிராமியாக்கி, பிராமியை பிராமணருடயதாக்கி தம்முடைய ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்தத் துணிந்தனர். எறும்பை எருமை
என்று சொல்லி, எருமையை யானைஎன்ற கதையாக இருக்கிறது.
3 . “தொல்காப்பியம் சமற்கிருத இலக்கணங்களையும் இலக்கிய நெறிகளையும் பின்பற்றியது”.
களப்பிரர்
கால பிராகிருதமும் பாலியும் (கி.பி 200 –
525 ) தமிழை அழிக்கப் புறப்பட்டன என்ற வரலற்றையும் மறந்து அப்போது சமற்கிருதமே இல்லை
என்பதையும் அறிந்தே மறைத்து திரித்தவரே இவர்.
தொல்காப்பிய இலக்கணம் சமற்கிருத இலக்கணங்களுக்கு முற்றிலும் வேறுபட்டது. சமற்கிருதம் ஆகிய செய்யப்பட்ட மொழிக்கு செய்யப்பட்ட இலக்கணங்கள் இயற்கை மொழியாகிய தமிழுக்கு எவ்வாறு பொருந்தும்? ஒருமை, பன்மை, ஆண்பால்,
பெண்பால் ஆகியவற்றில் இயற்கைக்குப்
பொருந்தாத தன்மையைச் சமற்கிருதத்தில் காணலாம். எ.கா.:
திணை, பால் அமைப்பு வடமொழியில் குறைபாடு உடையது.
கரம் ஆண்பால், மனைவி எனப் பொருள் தரும் ‘தாரம்’ ஆண்பால், களத்திரம் அலிப்பால் என்றும் அறிவுக்குப் பொருந்தாத பாகுபாடுகள் சமற்கிருதத்தில் உள்ளன.
திணைப்பாகுபாடு, இலக்கியத்தையும் வாழ்க்கையையும் அறத்தோடு இணைத்து கூறுதல் முதலியவை தமிழுக்கே உரியன.
அறத்தொடு நிற்றல் அன்பின் ஐந்திணை இவையெல்லாம் தமிழர்க்கே உரியன இவை
எவ்வாற்றானும் பிரகிருத சமற்கிருத இலக்கிய
இலக்கணங்களோடு பொருந்தி
வருதற்கு இடமில்லை. மேலும் இவற்றில் இதற்கான
இலக்கணமே கிடையாது . மேலும் எந்த உலக மொழிகளிலும்
தமிழின் பொருளதிகாரத்துக்கு நிகரானது
கிடையாது.
“ஆரியர் வரும்முன்னரே தமிழ் வழங்கியது… தமிழ் இலக்கணத்தை பின்பற்றித் தம் இலக்கணத்தை ஆரியர்கள்
அமைத்துக் கொண்டனர்” என்று பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவார். சமற்கிருதம் எழுத்து சொல் பற்றி மட்டும் பேசும் . இவ்வுண்மையை இவ்வுலக அனைத்து மொழியலாளரும் திறனாய்வாளரும் அறிந்து ஏற்றுக்கொண்டனர் என்பது
இவருக்கு நன்றாகப் புரியும். எனவே முதலில் இவர் மறந்து போன தம் தமிழிலக்கண அறிவை வளர்க்கட்டும் அல்லது சமற்கிருத இலக்கணம் அறியாராயின் அறிய முயலட்டும். அன்றி அறிந்தே செய்யின் அவர் யார் என்பது சொல்லாமலே விளங்கும்.
4 . “தொல்காப்பியம் கூறும் “ஐந்திணை, நானிலம் ஆகியவை, பரதரின் நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்ட நாடகத்துக்கே பின்புலமாகப் பயன்படுத்தப் படும் காட்சிகளைப் பின்பற்றியவை”.
“அகப்பொருளும் அதன் துறைகளும், புறப்பொருளும் அதன்
துறைகளும், அவ்விருவகைப் பொருள்களினியைபுகளும் வட மொழியினின்றும் என்றென்றும் கிடைத்தலியலாத
அரிய தனித் தமிழ் விஷயங்களாம்”. (பரிதிமாற்கலைஞர்: தமிழ் மொழியின் வரலாறு, ப.25)
தமிழுக்கே
உரிய சிறப்பான ஐந்திணை, நானிலம் என்ற இயற்கை சார்ந்த
நிலப்பாகுபாட்டையும், தொல்காப்பியத்துக்கே
உரிய வாழ்வியலோடு கூடிய இலக்கணக் கோட்பாடுகளையும் சிறுமைப்படுத்த முயன்றுள்ளார்.
முதன் முதலாக புரந்தரதாசரால்
கி.பி. 15 – ஆம் நூற்றாண்டில் கூறப்பட்ட பரதரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து கி.மு. 7- ஆம் நூற்றாண்டின் தொல்காப்பியத்துக்கு வந்ததாகப் பதிவு செய்து தமிழுக்குப் பெருங்கேடு செய்யவும் துணிந்தார்.
கி.பி. 15 – ஆம் நூற்றாண்டில் கூறப்பட்ட பரதரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து கி.மு. 7- ஆம் நூற்றாண்டின் தொல்காப்பியத்துக்கு வந்ததாகப் பதிவு செய்து தமிழுக்குப் பெருங்கேடு செய்யவும் துணிந்தார்.
ஆனால் பரிதிமாற் கலைஞரோ, “தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர்
அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழி யினின்றுமே தமிழிற்கு அவை வந்தன
போலவும் காட்டி விட்டனர்” (ப.20) - என்று
சொல்கிறார் . தமிழ் தாழ்ந்ததென்றும் சமற்கிருதமே உயர்ந்ததென்றும் நினைக்கக் கூடிய குலத்தில் பிறந்தும்
தமிழின் பெருமையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் பரிதிமாற் கலைஞர் எனப் பூரணலிங்கம் பிள்ளை பாராட்டுகிறார் .
5 .“வேத நெறியைப் பின்பற்றி இந்திரன் வருணன் குமரன் முதலிய கடவுள்களைத் தொல்காப்பியம் கூறுகிறது’’
வேதம் கூறுவதைத் திரித்து தமிழர்க்கே உரிய
குமரக் கடவுளையும் தன்வயமாக்கல் கொள்கையின்படி வேதக் கடவுளர் ஆக்கினர். எரியூட்டி,
தீ வளர்த்து, ஆகுதி சொரிந்து, குதிரை, ஆடு, மாடு
போன்ற விலங்கினங்களை ஆகுதியாக்கித் தீயிலிட்டு வழிபட்டுச்
சோமபானம் சுராபானம் அருந்தித் தீ வழிபாட்டைக் காட்டும் வேத நெறி எங்கே ?
இந்திரவிழா வழிபாட்டை நடத்திய தமிழரெங்கே ? வான் சிறப்பு, மாமழை போற்றுதும்… என உழவும் நீரும் போற்றப்பட்டது தமிழரால். ஆனால் தீ வழிபாட்டை போற்றி இந்திரனை எதிரியாக்கி இழிவுபடுத்திக் கதைகட்டிய இவர்கள் எங்கே ?
இந்திரவிழா வழிபாட்டை நடத்திய தமிழரெங்கே ? வான் சிறப்பு, மாமழை போற்றுதும்… என உழவும் நீரும் போற்றப்பட்டது தமிழரால். ஆனால் தீ வழிபாட்டை போற்றி இந்திரனை எதிரியாக்கி இழிவுபடுத்திக் கதைகட்டிய இவர்கள் எங்கே ?
தமிழரின் மதமே சைவம். ஆதி சங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சண்மதக் கோட்பாட்டை உருவாக்கித் தமிழரின் சிவன், திருமால், முருக வழிபாட்டைத் தன் வயப்படுத்தி, வேத நெறியாகிய ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை, யானை முதலிய விலங்கினங்களை ஆகுதியாகத் தீயிலிட்டு உண்டு சுராபானம் அருந்திக் களித்த ஆரியக் கூட்டத்தைத் தமிழ் நெறியாகிய சைவ நெறியைப் பின்பற்றச் செய்தார்.
6. “தொல்காப்பியச் செய்யுளியல், உவமயியல், எழுத்தியல் ஆகியன சமற்கிருத்தை பின்பற்றியன”.
‘வடமொழியின் ‘இலகு குரு கண யதி
விருத்தம்’ என்ற பாகுபாடுகட்குத் தமிழில்
இடமேயில்லை. தமிழ்ப்பாவியல் (செய்யுளியல் ) கூறுகள் …. தமிழுக்கே உரியன; அவை வடமொழியில் இல்லை.( பரிதிமாற்கலைஞர்: தமிழ் மொழியின்
வரலாறு ,பக்கம் 25) தமிழ் “மோனை முத்தமிழ்” என்ற சிறப்பை உடையது. சொல்வழக்கற்ற, தனக்கென ஒரு நாடற்ற , இனமற்ற, இலக்கணமுமற்ற சமற்கிருதம் தொன்மையான தமிழுக்கு வழிகாட்டியது என்பது
வேடிக்கை. மறைமலை அடிகளார் 108 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது
1904 – ஆம் ஆண்டு மே திங்கள் 25 – ஆம் நாள் மதுரை தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் இரண்டாம் நாள் உரை, இன்றைய நாகசாமியின்
ஏகடியத்துக்கு வரிக்கு வரி தக்க பதிலடி ஆகும்.
7 . “திருமண முறை பிராமணர்களால் உருவாக்கப்பட்டது”.
அகநானூற்றில் சொல்லப்படும் திருமண முறை மணல்
பரப்பிப் பந்தல் போட்டு என்று இன்றும்
நாம் தொடரும் திருமணமுறையை இவர் எப்படித் தங்களால்தான் உருவாக்கப்பட்டது
என்று சொல்லலாம்?
பார்ப்பனர் கூறும் திருமண மந்திரம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பது நமக்குத் தெரியும்.
8. “தொல்காப்பியம் பிராமணர்களை உயர்ந்தோர் என்றும் அந்தணர் மறைமொழி என்றும் கூறுகிறது”.
ஆரியர் என்றால்
இழிந்தோர் என்பதை, “மிலேச்சர் ஆரியர்” - என்று திவாகரம் (நூற்பா 72) கூறும். தொல்காப்பியர் கூறுவது தன்நெறி வழுவாச் சான்றோரான அறவோரை மட்டுமே. அறவோர்தான் அந்தணர் ஆவர்.
9. “சிலப்பதிகாரம் காப்பியம் இல்லை; கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடக நூல்; சமற்கிருத நாட்டிய சாத்திரத்தை பின்பற்றியது; வரிப்பாடல்கள் அலங்கார சாத்திரங்கள் கூறும் யமகம் என்பதைப் பின்பற்றியவை.”
சிலப்பதிகாரம்
சிறந்த முத்தமிழ்க்காப்பியம் , குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் திறனாய்வாளர்களால்
ஏற்கப்பெற்றுள்ளது. சமற்கிருத காப்பியங்கள்தான் தொன்மமும் (புராணமும்) கற்பனையும் கொண்டு
செயற்கையாக உருவக்கப்பட்டவை. சிலப்பதிகாரத்தில்
வரும் சேரன் செங்குட்டுவன் ,பாண்டிய நெடுஞ்செழியன் , இலங்கை மன்னன் கயவாகு முதலியோர்
வரலாற்று மன்னர்கள் ஆவர். பூம்புகார் அகழ்வாய்வுகள், கண்ணகி கோயில் முதலியன சிலப்பதிகாரத்தை
வரலாற்றுக் காப்பியம் என உறுதி செய்யும்.
சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடல்கள்
தொன்மையான தமிழிசை வடிவங்களாகும். யமகம் என்பது மடக்கணி. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட
அணிவகையைக் கொண்டு பழைமையான சிலப்பதிக்காரத்தோடு ஒப்பிட்டுப் பிற்காலமாகக் கூறுதல்
பிழை. சமற்கிருத்தில் இசைப்பாடல்கள் இல்லை; பிற்காலத்தில் சிலர் உருவாக்கினர்.
10. “சங்க இலக்கியங்கள் செயற்கையாகப் பாடப்பட்ட பாடல்களை உடையன; வரலாற்று தன்மை அவற்றில் இல்லை”.
சங்க கால மக்கள்
வாழ்வு இயற்கையானது , ஆதலால் அவர்களால் பாடப்பட்ட பாடல்களும் இயற்கையோடு இயைந்தவை.
பறவைகளையும் விலங்குகளையும் மரங்களையும் செடிகொடிகளையும் பூக்களையும் போற்றி யாமம்,
வைகறை…. என நாளையும் இளவேனில், முதுவேனில்
என ஆண்டையும் வகுத்து இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழர் வாழ்வு. மயில் அகவுவது போலவும்
ஆசிரியர் கூறுவது போலவும் அமைந்த ஆசிரியப்பாக்களால் பெரிதும் பாடப்பெற்றவை சங்கப்பாடல்கள்;
இசை நயம் சான்றவை கலி, பரி ஆகிய பாடல்கள்; சிறிது நெகிழ்வுடைய வஞ்சிப்பாடல் அளவில்
குறைவே; முடிவுரை சொல்வது போல் சுருங்கச் சொல்ல வெண்பாக்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.
எனவே மிகவும் இயற்கையும் எழிலும் கொண்டவை சங்க இலக்கியங்கள்.
செயற்கையாகப் பாடாமல், புனைந்துரையோ
பொய்யுரையோ மீகற்பனையோ இல்லாமல் பாடப்பெற்ற சங்கப்பாடல்கள் அக்கால மன்னரையும் மக்களையும்
உள்ளவறே பாடியுள்ளதால் வரலாற்றுச் சான்றுகளாகவே அமைந்துள்ளன. கி.மு. 3ஆம் நூற்றாண்டளவிலிருந்து
கி.பி. முதல் நூற்றாண்டு வரை எழுதப்பெற்றுள்ள
பிற நாட்டார் குறிப்புகளும், பிற நாடுகளிலும் தமிழகத்திலும் கிடைத்துள்ள தொல்லியல்
சான்றுகளும் இதனை உறுதி செய்கின்றன. சங்ககாலக் கல்வெட்டுகள் சங்க இலக்கியச் செய்திகளை
உறுதி செய்கின்றன. ( திரு நாகசாமியே சில சங்ககாலக்
கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார்)
“ஆரியம் நன்று தமிழ் தீது” என்ற குயக்கொண்டானைச்
சாகும்படியாக ஆணையிட்டு பிறகு மன்னித்து உயிர்ப்பித்தார் நக்கீரர் என்ற கதையுண்டு.
“தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன் வெறும் புலவோனே” -என்று பாடுவார் தண்டபாணி சுவாமிகள். அவர் வேலூரில் சமற்கிருதமே உயர்ந்ததென்று வாதிட்ட
இருவரை எதிர்த்துத் தமிழே உயர்ந்ததென்று வாதிட்டார்; எவ்வகையிலும் அவர்கள் ஏற்காததால்
திருவுளச்சீட்டு போட்டுத் தமிழே உயர்ந்ததென்று அறிவித்தார். “தமிழே உயர்ச்சி எனச் சீட்டுக் கொடுத்த பெருமாளே”
என இறைவனைப் பாடினார்.
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்
இந்தியா என்றாலே வேதமும் சமற்கிருதமும் மட்டுமே உள்ள நாடாக வெளிநாட்டினர் நினைத்தனர்.
மேக்சுமுல்லர் என்ற செர்மானிய அறிஞர் சமற்கிருதத்தையும் வேதத்தையும் படித்து அவற்றைப்
பற்றி நிறைய நூல்கள் எழுதிப் பரப்பினார். அவர்
‘தமிழ் மொழிப் பற்றியும் தமிழர் நாகரிகத்தைப் பற்றியும் உணராமல் போய்விட்டேனே’ என்று
பிற்காலத்தில் வருந்தித் தம் நாட்குறிப்பில் எழுதியுள்ளார் (இந்திய பண்பாடுகளின் மூலம்
– ப. 32).
‘சமற்கிருதக் கருத்துகள் யாவும் தமிழிலிருந்தே
பெறபட்டவை. ஆரிய நாகரிகம் நாடோடி நாகரிகம்;
திராவிட நாகரிகமே உயர்ந்தது. தமிழர்களின் நூற்றுக்கணக்கான
நகரங்களையும் கோட்டைகளையும் ஆரியர்கள் தீயிட்டு எரித்தனர்; ஆறு மாதம் எரிந்ததில் தமிழர்களின்
இலக்கண இலக்கியக் கலைச்செல்வங்கள் எரிந்து சாம்பலாயின’ என்று மேக்சுமுல்லர் கூறுவார்
(அப்பாதுரையாரின் ‘தமிழ் முழக்கம்’ மாத இதழில்).
திராவிடருடைய நாகரிகம் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கியது; அதனைப் பின்பற்றியது
ஆரிய நாகரிகம் என்று விவேகானந்தரும் சவகர்லால் நேருவும் கூறுவர். தமிழின் உயர்வை அறிந்த காந்தியடிகளும் நேதாசியும்
அம்பேத்கரும் மறுபிறவியிலாவது தமிழர்களாய் பிறக்க வேண்டும் என்று விரும்பினர். தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டு, தாம் பார்ப்பனர்
என்பதால் சமற்கிருதமே உயர்ந்ததென்று கூறித், தமிழைப் பழிக்கும் செயலைச் செய்வது, பெரியார்
தோன்றிப் போக்கிய பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் தோற்றுவிக்க முயல்வதாகும். அவ்வாறு
மீண்டும் ஆரியத்தீமை பரவினால் எதிர்ப்புத் தீ பரவட்டும் எனத் தமிழ்நாட்டு அறிஞர் கூறும் நிலை ஏற்படும்!
-முனைவர் பா.இறையரசன்.
நன்றி: விடுதலை நாளிதழ் 01.08.2012 & 02.08.2012