புதன், 11 ஜனவரி, 2012

பொங்கல் இதழ்


ஆய்வு4;தோய்வு 1                                                                 சுறவம்,2043 / சனவரி,2012
    ஆய்வுத்தமிழ்
ஆசிரியர்: முனைவர் பா.இறையரசன்                                       இணை ஆசிரியர்: கோ.கண்ணன்
ஆசிரியர் குழு:  தனித்தமிழ்வேங்கை  மறத்தமிழ்வேந்தன்,  தா.இளங்குமரன் ,சிங்கபுரம்,  சுந்தர் செயபாலன்,அமெரிக்கா
                                                        எழுத்தேணி அறக்கட்டளை வெளியீடு.


------------------------------------------------------------------------------------------------------------


திருவள்ளுவர் ஆண்டு  2043 பிறக்கிறது!
உலகத் தமிழர்களின் வாழ்வு சிறக்கட்டும்!
உழவர் திரு நாளில்
நம் நிலம், ஆறு, மணல் கொள்ளை தடுக்கச் சூளுரைப்போம்!                            

சிற்றூர்களையும் ஆறுகளையும் காடுகளையும் மலைகளையும் கடலையும் பாதுகாத்து - உணவூட்டும் உழவுக்கும் தொழிலுக்கும்உழவர்க்கும் பாட்டாளிகளுக்கும்  மீனவர்களுக்கும்  ஆக்கம் சேர்ப்போம்!

திருவள்ளுவரைப் போற்றி அவர்தம் திருக்குறளைப் பின்பற்றுவோம்!
மாடுகளையும்  ஆடுகளையும்  
சிற்றுயிர்களையும்  பேணும் தமிழர் மரபே  மாட்டுப் பொங்கல்!

வயலில் களையெடுப்பதிலும்  மனத்தில்  களையெடுப்பதிலும்  தாய்மையும் தூய்மையும் கொண்ட பெண்களையும்
பெரியோர்களையும்  குழந்தைகளையும்  போற்றும் நாளே  காணும் பொங்கல்!




தமிழ்ப் புத்தாண்டு பொங்குக!        -செந்தமிழன்சீமான்

அநீதி இழைப்பார்க்கு  எதிராக-

அடக்கு முறைக்கு எதிராக-
அடிமைத் தனத்திற்கு எதிராக-
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

ஊழல் புரிவோர்க்கு எதிராக-
வதைக்கும் கையூட்டிற்கு எதிராக-
பாலியல் வன்முறைக்கு எதிராக-
பண்பாட்டு சீரழிவிற்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

இன அழிப்பிற்கு எதிராக-
அணு உலைக்கு  எதிராக-
முல்லை அணை எதிர்ப்புக்கு எதிராக-
மீனவரைத் தாக்குவதற்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

மகளிர் உழவர் உழைப்பாளர்
மாணவர் இளைஞர் ஆன்றோர் பொங்க
தை முதல் நாள்  தமிழர் திருநாள்!
உலகத் தமிழர் இல்லங்களிலும்
இனியதமிழ் உள்ளங்களிலும்
பொங்கட்டும்  புரட்சிப் பொங்கல்!
___________________________________________________________________________________________________________

முல்லைப் பெரியாறு

மென்மையான தமிழ் மொழியை மெல்லின மூக்கொலிகள் அதிகம் சேர்த்துமேலும் மென்மையாகப் பேசும் அழகிய தமிழ்மகளே மலையாளம்; சமற்கிருதச் சேர்க்கையால் திரிந்து கேரளம் ஆகியது. நல்ல நீர்வளமும் அழகிய சோலைகளும் ஆறுகளும் மலைகளும் நிரம்பிய அப்பகுதி ஆரியத்துக்கும் மனுவியத்துக்கும் இடம்கொடுத்து இன்று தமிழருடன் மாறுபட்டு நிற்கிறது. தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளேயே இருக்கின்ற கண்ணகி கோயிலுக்கும் புகைநீர்க்கல் (ஒகனேக்கல்) அருவிக்கும் தேக்கடிக்கும் செல்லும் தமிழர்களைக் கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் தமிழக எல்லையில் உள்ள தமிழகத்துக்காகக் கட்டப்பெற்ற முல்லைப் பெரியாற்று அணைக்கட்டிலும் தன் மீதூரலை- வன்கைப்பற்றலை- மிகுதியாக்கி வருகிறது. இதற்குக் கரணியம் தமிழர்கள் அறவுணர்வோடும்  அன்புணர்வோடும் இருப்பதோடு மெத்தனமாக இருப்பதும் பொது இலக்குகளில் ஒன்றுபடாமல் இருப்பதுமாகும். ஆயினும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிலும் முல்லைப் பெரியாற்றுஅணைப் பாதுகாப்பிலும் தமிழக மக்கள் குறிப்பாக அப்பகுதி மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு  வெகு நாட்களாகப் போராடியும்   வருகின்றனர். சாதி மதம் கட்சி என்று பலவகைகளில் பிளவு படுத்தும் முயற்சிகள் நடந்தாலும், நடுவண் அரசும் கேரள அரசும் பலவகைகளில் மிரட்டி வந்தாலும் மக்கள் திரண்டுள்ளனர்.
சீமான் அவர்கள் கும்பகோணத்தில் கூறுகையில், “ இராசபக்சேயின் மேல் போர்க்குற்ற உசாவல் நடத்தவேண்டும் என்று நாம் போராடியபோது, மூவர் தூக்குத் தண்டனையைக் கொண்டு வந்தனர்; அதற்குப் போராடத் தொடங்கியதும் அணு உலை, அதற்குப் போராடத்தொடங்கியதும் முல்லைப் பெரியாறு என்று திசை திருப்பி வருகின்றனர்என்று கூறியது மாபெரும் உண்மை. முல்லைப் பெரியாறு அணைக்குப் போராடும் தேனி கம்பம் பகுதி  மக்களைத் திசை திருப்ப நியூட்ரினோஆலையைத் தொடங்குவேன் என்கிறது நடுவண் அரசு; அல்லது சந்தடிசாக்கில் கொண்டு வர நினைக்கிறது. அதற்காகத்தான் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கு  இத்திட்டத்திற்கு நடுவண் அரசுடன் சேர்ந்து  நிதிஉதவி செய்யும் கணிதமேதை இராமானுசம் கல்வி நிலையத்தின் விழாவுக்காகச் சென்னை வந்துள்ளார்.
இராமநாத சேதுபதி மன்னரின் கச்சத் தீவை சிங்களர்க்குத் தாரை வார்த்ததைப் போல, சேதுபதி மன்னரின் ஆளுகையில் இருந்த முல்லையாற்றைக் கேரளர்க்குத் தாரைவார்க்க முயல்கின்றனர்! சேதுபதி மன்னரின் அமைச்சர் முத்திருளாண்டிப்பிள்ளை 1789-இல் முல்லைப் பெரியாற்றை வைகையுடன் இணைக்கும் திட்டத்தை தீட்டி, பெருஞ்செலவு என்பதால் அது செயற்படுத்த முடியாமற் போயிற்று; அதேபோல் ஆங்கிலேய அரசாலும் அதிகம் செலவுசெய்ய இயலாதபோது, அணையைக் கட்டிக்கொண்டிருந்த பென்னிகுயிக்தம் சொத்துகளையும் விற்று 1886-இல்  8000 குறுக்கம் (ஏக்கர்) நிலத்தில் 155 அடி உயரத்திற்கு அணையைக் கட்டிமுடித்தார். அப்போது திருவாங்கூர் சிற்றரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அவ்வணை இருக்கும் இடமும் தண்ணீரும் தமிழகத்துக்கு உரிமை என்பதாகவும்,  இடத்துக்குக் குத்தகையாகத் தமிழகம் சிறு தொகை செலுத்த வேண்டும் என்றும் முடிவாகியது. ஆனால் 1970-இல் குத்தகைப்பணத்தை அதிகமாக்குவதற்காக்கூடியபோது, தமிழ் நாடும் கேரளமும் மீண்டும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில்                                   அதற்காகத்தான், அணை உடைந்து கேரள மக்களுக்கு அழிவு ஏற்படும் என்று கூறிக் கேரளர்களைத் தமிழகத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளது. அணை உடைவது போன்ற திரைப்படம் எடுத்து நடுவணரசு ஒப்புதலுடன் பரப்படுகிறது.
அணை உடையாது; ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன் கரிகாலன் கட்டிய கல்லணை  உறுதியாகத்தான் உள்ளது; வெள்ளம் வந்து  153 அடி உயரம் ஆகிய போதும், சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்ட போதும் அணை உடையவில்லை. அப்படியே அணை உடைந்தாலும் இடுக்கி, குலமாவு, செருதோணி அணைகளை  நோக்கியும்  தமிழகம் நோக்கியும் வெள்ளம் வரும். இடுக்கி அணை முல்லைப் பெரியாற்று அணையைவிட 7 மடங்கு பெரியது. மேலும் முல்லைப் பெரியாறு அணை 2600 அடி உயரத்தில் உள்ளது; கேரள மக்கள் வீடுகளோ 3200 அடி உயரத்தில் உள்ளன. இந்தியாவில் நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய பைஞ்சுதை (சிமெண்டி) அணைகளும் 1000 ஆண்டுகட்கு முன் கட்டப்பெற்ற  பழய காரையாலும்
கல்லாலும் கட்டப்பெற்ற அணைகளும் 145 உள்ளன; இராசசுத்தான் செய்சாமந்து அணை 1730-இல் கட்டபெற்றது, இன்றுவரை நன்றாகவே உள்ளது; அவை எதுவும் இடியும் நிலையில் இல்லை.
கேரளம் 40 கோடி செலவு செய்து இடித்துவிட்டு 600 கோடி செலவில் புதிய அணையைக் கட்டியபின் தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்கிறது; ஆனால் இப்போதுள்ள இடத்திலிருந்து 1300 அடி தொலைவில் 50 அடி தாழ்வான இடத்தில் கட்டுவதாகக் கேரளம் திட்டம் தீட்டி உள்ளதால், தமிழகம் நோக்கித் தண்ணீர் வரவே இயலாது என்று நயன்மையர் (நீதிபதி) ஏ.கே.இராசன் தம் கட்டுரையில் எழுதியுள்ளார்.
அணையில் 152 அடி தண்ணீர் இருந்ததைக் குறைத்த்136 அடியாக்கி,மீதியை இடுக்கி அணைக்குக் கொண்டுபோய் மின்விசை ஆக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, உச்ச நீதி மன்றம் 146 அடியாக உயர்த்தலாம் என்று 2006-இல் தீர்ப்பு கூறியும், இதுவரை தராமல் மறுத்துவருவதோடு, 120 அடியாகக் குறைக்கவும் , அணையை உடைக்கவும் சட்டம் கொண்டுவருகிறது என்றால் தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்ற எண்ணமே!
                 தமிழகம் தன் உரிமையை இழக்கக் கூடாது. அப்படித் தமிழக உரிமையில் தலையிட்டால், எங்கள் உரிமை ஆகிய இடுக்கி மாவட்ட்த்தை நாங்கள் கேட்போம் என்று நாம்தமிழர்கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கூறியபடி, நம் தமிழ் நிலத்தை மீட்டால் தண்ணீர் உரிமை தானாகவே நமக்கு வரும்.                                                                                                                                              
                                                                                              - இறையரசன்                      


ஒருங்கு குறியில்
பிராமிக்குத் தனியிடமா?

ஐயத்திற்கு இடமின்றி சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே எனப் பலவாற்றானும் உறுதி செய்யப்பட பின்னரும், மாலைக்கண் நோய்பிடித்த கூட்டமொன்று தமிழி என்றழைப்பதற்கு மாறாகப் பிராமி என்றுரைக்கும்  அறியாமை கண்டு எனது கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன்.ஒருங்குகுறி (யுனிகோடு) சேர்த்தியத்திடம் இவ்வாறான தவறான  தகவல்  கொண்டு சேர்க்கும் கயமை  நிறை மாந்தர் யாவர் ?

செம்மொழி மாநாட்டிலே படைக்கப்பட்ட ஆய்வுகளில் தெள்ளத்தெளிவாகச் சிந்து வெளி நாகரிகம், தமிழர் நாகரிகமே என்றும் மொழி, ஊர்ப் பெயர்கள், பண்பாட்டுக்கூறுகள் , அகழ் வாய்வில் தமிழருடையதே என அறுதியிட்டு கூறப்பட்ட பின்னரும் பிராமி எங்கிருந்து வந்தது ?
ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுகள் கி.மு.8000 - ஆண்டுகட்கு முந்தியது என்றும் நிறுவப்பட்ட பின்னரும், பிராமி எங்கிருந்து வந்தது ?

இன்றுவரை  நாளிதழ்களைப் புரட்டினால் , தொடர்ந்த அகழாய்வுகளில், பொருந்தல், காஞ்சிக்கருகே பாலாற்றங்கரை போன்ற பல இடங்களில்   பழந்தமிழர் தொடர்பான  100,000 ஆண்டுகள் பழமையான கற்காலக் கருவிகள்   போன்ற அசைக்க முடியாத தரவுகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் வேளையில் பிராமி எங்கிருந்து வந்தது ?

உலக அறிவியல் அறிஞர்களின் மரபணு ஆய்வின் வழியே உசிலம்பட்டி விருமாண்டியின் மரபணு 50000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வாழ்ந்துகொண்டுள்ள மாந்த இனமே நம்மினம் என முடிவு கண்ட பின்னும் பிராமி எங்கிருந்து வந்தது ?

ஆரியர் , திராவிடர் பிரிவினை கிடையாது என்று சொல்லிக் கொண்டே தமிழ் மொழி, இனம், பண்பாட்டின்  எதிரிகளின் செயல்களே  வட பிராமி தென் பிராமி போன்ற கட்டுக் கதைகள் !தமிழின எதிரிகள் நமக்குள்ளே !

 ஒரிசா பாலு எனும் ஆய்வாளர் 2011 சனவரித் .திங்கள் 17- ஆம் நாள் ஆசிய ஆய்வியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் தன் கடல்சார் ஆய்வின் பலனாக கிடைத்த முடிவுகளை கணினித் துணையுடன் படவிளக்கம் கொண்டு தெளிவாக  விளக்கினார்.
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும்`கடல் ஆமைகளின் கடற்பயண வழிகள் துணை கொண்டு - கடல் வழி, கடல் பற்றிய அறிவு, உலகம் முழுவதும் பரவிய தமிழர் என தன் ஆய்வின் முடிவுகளை அறிவித்தமர்ந்தார் .

நுனி நாக்கு ஆங்கிலத்தில், கொரியாவிலிருந்து வந்த அறிஞர் நா. கண்ணன் என்பவர்  ஒரிசா பாலுவைப் பாராட்டி, உழைப்பைப் பாராட்டி அவரது ஆய்வு நமது வேதகால அறிவைக் காட்டுகிறது என்றார்! அங்கு கூடியிருந்த தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரந்தக் கமுக்கத் திணிப்புக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு !

                                                                                                                                  -வரலாற்றறிஞர் கோ.கண்ணன்


தஞ்சையில்  முப்பெரும் விழா
திருவள்ளுவர் ஆண்டு 2042 நளி (கார்த்திகை) 19 (05.12.2011) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆபிரகாம் பண்டிதர் வீட்டருகில் உள்ள “இலாலி திருமண மண்டபத்தில் எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளையின் முப்பெரு விழா தஞ்சை சந்திரசேகரன் கரகாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
 நிறுவனர்,சிங்கப்பூர் ஃபூச்சுன் பள்ளித் தமிழாசிரியர், சகாயராசு (எ) இளங்குமரன் அவர்களின் தங்கை  தா.சந்தனமேரி,  அ.சோசப் ராசு ஆகியோருக்குக் காலையில் நடைபெற்ற திருமணத்திற்கான  வரவேற்பு விழாவும் எழுத்தேணி இல்லம்திறப்பு வாழ்த்துரை விழாவும் எழுத்தேணி பதிப்பகத்தின் சவேரியார்நூல் வெளியீட்டு விழாவும்  என முப்பெரும் விழாவாக, எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளையின் செயலர்,    முனைவர் பா.இறை யரசன் தலைமையில் நடைபெற்றன.
 சென்னை வருமானவரி ஆணையாளர், திரு சீதா. செந்தாமரைக்கண்ணன், இ.வ.பஅவர்கள்,
 “விடிவெள்ளியின் வருகைஎன்ற நூலை வெளியிட்டு வாழ்த்துரைத்தார் நூலைப்பெற்றுக் கொண்டு சென்னை, கல்லூரிக் கல்வி உதவி இயக்குநர், திரு அ.மதிவாணன் வாழ்த்துரைத்தார்.

வரலாற்ற்றிஞர் கோ.கண்ணன், திருச்சிராப்பள்ளிபாரதிதாசன் பல்கலைக்  கழகத் தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் பா.மதிவாணன்,  புலவர் நாகேந்திரன், கவிஞர், தனித் தமிழ் வேங்கை மறத் தமிழ் வேந்தன் முதலியோர் வாழ்த்துரைத்தனர்நூலாசிரியர் மும்பை சரவணன் ஏற்புரை கூறினார்.
 விழா வில் எழுத்தேணி அறக்கட்டளை உறுப்பினர்களும்  தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் குடும்பத்தினரும்
திரளாகப் பங்கேற்றனர். எழுத்தேணி அறக்கட்டளை நிறுவனர் தா. இளங்குமரன் (சகாயராசு  )நன்றி கூறினார்
--------------------------------------------------------------------------------------      
         ஒருங்குகுறியில்கிரந்தத் திணிப்பு கூடாது!


அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தில்  உள்ள  கரோலினா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுந்தர் 

செயபாலன் அவர்கள்  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் உறுப்பினராகிக்காஞ்சி மடத்தின் இரமண சர்மா 

தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துகள் சேர்க்க வேண்டும் என்று கொடுத்த முன்மொழிவை 

எதிர்த்துத் தம் கருத்துரையைத் தக்க ஆவணங்களுடன்  பதிவுசெய்தார். இப்போது மீண்டும் அதே 

சிக்கலை நடுவண் அரசு எழுப்பியுள்ளதால், தமிழில் கிரந்தத் திணிப்பு கூடாது என்று தமிழக அரசின் 

தமிழ் வளர்ச்சித்துறை  முலமாகத் தமிழ் அமைப்புகள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுகிறோம்

ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு அதன் உறுப்பினராக உள்ள நண்பர் திரு சுந்தர் செயபாலன் தம் 

எதிப்பைப் பதியவுள்ளார். அவர் வழியாகவும் நம் கருத்துகள் சேர்க்கப்பெறும்.

---------------------------------------------

வரலாற்றறிஞர் கண்ணன் சப்பான் நாட்டில்! அவருக்கு அமெரிக்கத் தலைவர் ஒபாமா இலங்கை 

பற்றி மடல்!


வரலாற்ற்றிஞர் கோ.கண்ணன், இப்போது சப்பான் பயணத்தில் உள்ளார். அவர் சென்ற மாதம் அமெரிக்க 

மக்களாட்சித் தலைவர் ஒபாமா அவர்களுக்கு சிங்களப் புத்தமத இனவாத அரசு செய்த தமிழ்இனஅழிப்புப் 

போரில் நடந்த மனித 

உரிமை மீறல்களையும் வன்கொடுமைகளையும் விளக்கி நீண்ட மடல் எழுதினார். அதற்கு அமெரிக்க 

மக்களாட்சித் தலைவரிடமிருந்து உடனடியாகக்

கவனிக்கப் பெறும் என்றும் ஆவன செய்யப்பெறும் என்றும் மறுதொடர்புகொண்டு மீளத் 

தெரிவிப்பதாகவும் மடல்  வந்துள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொங்குக தமிழ்ப் பொங்கல்!                                   

விண்மீதே கதிரவனின் வீச்சு; செந்நெல்

     விளைநிலம்தான் உழவர்தம் மூச்சு; வீர

மண்மீதே ஏறுவிளையாட்டு; வெற்றி

     மறவர்க்கே புகழ்மாலை சூட்டு; காதல்

கண்மீதே இரக்கமதைத் தேக்கு; ஏழைக்

     கலக்கத்தைப் போர்செய்தே போக்கு;ஈன்ற

பெண்மீதே பழியுரைத்த அடிமைக் காலம்

     பெயர்ந்ததென நீயெடுப்பாய்த் தீயின் கோலம்!


சேற்றுக்குள் பாடுபடும் மக்கள்; வாழ்க்கை

      சிறக்காமல் ஏனின்னும் சிக்கல்; ஆழ

ஊற்றுக்குள் கசிகின்ற தண்ணீர்;  அந்த

      உழவர்தம் விழியூற்றின் கண்ணீர்;  ஓடும்

ஆற்றுக்குள் அணைகட்டி வைப்பார்; சிந்தும்

      அமுதமழைத் தேன்துளியைச் சேர்ப்பார்; தென்றல்

காற்றுக்குள் நடனமிடும் பயிர்க்க ளிப்பார்;

     கயவர்கள் அவருழைப்பால் தான்செ ழிப்பார்!


நடிக்கின்ற நடுவணர சாட்சி; செய்யும்

      நரிக்குணத்தால் அதற்கில்லை மாட்சி; மேழி

பிடிக்கின்ற ஏராளர் வீட்டில்; பஞ்சம்          பிழைத்திருந்தால் ஏதுயர்வு நாட்டில்
எங்கும்

அடிக்கின்ற கடன்கொள்ளை வட்டம்; காண்பீர்!

      அனைத்துல வைப்பென்னும் திட்டம்; உண்மை

வெடிக்கின்ற புரட்சிக்கே உரத்தை ஊட்டும்

       விடியலுக்கே நாம்தமிழர் அணியைக் கூட்டும்!



வேர்வைக்குள் கதிர்விளைக்கும் பேர்கள்; மக்கள்

       விடுதலைக்கே முதலாணி வேர்கள்; சட்டப்

போர்வைக்குள் வரிபோடும் கூட்டம்; இன்னும்     போடுவதேன் பெரும்பித்த 
லாட்டம்; புல்லர்

தீர்வைக்குள் விளைபொருளின் ஏற்றம்; என்றும்

      திண்டாடும் உழவர்க்கே மாற்றம்; சீமான்

பார்வைக்குள் நாம்தமிழர் படைகள் பொங்க,

       பயனுழவர் படைதிரள்க! யாவும் வெல்க!



                         

                - தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்



* * * * * * * *

பொங்கல் விழா
திருவள்ளுவர்  புத்தாண்டுப் பிறப்பு   தை முதல்நாளில் தமிழர்களே!
உறுதி ஏற்போம்!
 1.குழந்தைகளுக்கும், இல்லங்களுக்கும் வணிக  நிறுவனங்களுக்கும் நல்ல தமிழில் பெயர் சூட்டுவோம்!
 2. கல்வி மொழி, ஆட்சி மொழி, சமயமொழி தமிழாக்குவோம்!

கரும்புத் தோட்டத்திலே ****
3. மாதம் ஒரு தமிழ் நூலாவது வாங்குவோம்!

 4. மாதம் ஒரு இலக்கியக் கூட்டமாவது குடும்பத்துடன் செல்வோம்!

 5. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, முதன்மொழி, புலமை, வெல்லும் தூயதமிழ் ….. முதலிய தனித்தமிழ் இலக்கிய இதழ்களை வாங்குவோம்!

 6. நீங்கள் வாழும் இடத்தில், தெருவில், ஊரில், பகுதியில் நடைபெறும் மக்கள் மன்றத்தில் / கூட்டங்களில் பங்கேற்று குமுகாயச் சிக்கல்களில் தீர்வு காணப் பாடுபடுங்கள்

7 மொழி, இனம், வாழ்வியல் தொடர்பாகஉங்கள் கண்ணில் கருத்தில் தெரியும் குறைகள் பற்றி மக்கள் மன்றங்களுக்கு, இதழ்களுக்கு ஊடகங்களுக்கு அதிகாரிகளுக்கு எழுதுங்கள்
-       இறையரசன்

                                                               *************************** 

                                 செம்மொழியும் சிவந்த ஈழமும்”  -  நூலுக்கான மதிப்புரை

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று 1856-இல் கால்டுவெல் உலகிற்கு  உணர்த்தினார். நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த என் பாட்டன் மன்னன் சேதுபதி காலத்திலிருந்து போராடிச் செம்மொழி என்ற அறிவிப்பை இந்திய அரசு இப்போதுதான் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள குறைகளையும்இந்திய அரசு வாழ்விழந்த வடமொழிக்கும் நேற்று முளைத்த இந்திக்கும் கோடிகோடியாகக் கொட்டி மகிழுகிற நிலையில்தமிழுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக எழுதியுள்ளார் தஞ்சை இறையரசனார்.
                                                                                                     -----------------------  செந்தமிழன் சீமான்   
                                                       03-01-2012
                                                                   அணிந்துரை
ஈழத்திலே நூறாயிரக் கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக்கூட அறியாத உணராத தமிழ்மக்களே அதிகம். ஆனால் தமிழன் என்ற எண்ணத்தைவிட சாதீய உணர்வுகளே மேலோங்கியுள்ளன. சாதியின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கும் நிலையே அதிகமாக உள்ளது! அதனைவிடுத்து தமிழ் இனம் என்று இன அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். தமிழ்மொழியையும் தமிழினத்தையும் காப்பாற்றப் போராடும் அவர் முயற்சியே இந்நூல்!                                                                                                                                                                                   தா.இளங்குமரன்,     
                                                                                                                                                  தமிழாசிரியர், பூச்சூன் பள்ளி, சிங்கப்பூர்.
                                                                                                                                              01-01-2012.

பாலியல்+வன்முறை = திரைப்படம்” -
நூலுக்கான  மதிப்புரை
கலை வடிவத்தின் இன்றைய வளர்ச்சியான திரைப்படம், தொலைக்காட்சிஇணைய தளம் முதலிய ஊடகங்கள் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பதே நண்பர் இறையரசனின் விருப்பம் ஆகும். அவர் மனக்குமுறலைக் கலைத்துறையினர் அனைவரும் உணர்ந்தால் எதிர்காலச் சமுதாயம் சிறக்கும்.
நடிகர் இராஜேஷ்
02-01-2012
ணிந்துரை
ஒருங்குகுறியில் (யுனிகோடில்) கிரந்த எழுத்துத் திணிப்பாகட்டும், ஈழத்தமிழ் மக்கள் இன்னல் ஆகட்டும் எங்கெல்லாம் தாய்த் தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு  இடர் என்று கேட்ட உடனேயே ஒரு போராளியைப் போன்று செயற்பட்டுத் தடுத்திட முயல்பவர்தான் இறையரசனார்அவர் மேன்மேலும் இதைப் போன்று பல நல்ல நூல்களைப் படைத்துத்  தமிழ்த்  தொண்டாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சுந்தர.செயபாலன்,
தலைவர்,கரோலினா தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கா.
01-01-2012