வியாழன், 11 ஜூலை, 2019

தினத்தந்தி 23.06.2019 இதழில் வெளிவந்த கட்டுரை:
வரலாற்றுச் சின்னங்களைக் காப்போம்!
                                                             -முனைவர் பா.இறையரசன்

 <- p="">  

காவிரிஆற்றிலேயே மணல்குவாரிகள் என்ற பெயரில் சுரங்கங்களைத் தோண்டிவருகிறார்கள் மணற் கொள்ளையர்கள். அதேபோல் மலைகளைக் குடைந்தும் தகர்த்தும் தரைமட்டமாக்கி, மேலும் தரைமட்டத்துக்குக் கீழேயும் தோண்டிப் படுபாதாளம் ஆக்கி வருகின்றனர். சென்னையில் பல்லவபுரம் (பல்லாவரம்) மலைப் பகுதியிலும், விழுப்புரம், திருவண்ணாமலை,சேலம்,  புதுக்கோட்டை மதுரை மாவட்டங்களிலும் இத்தகைய மலை அழிப்புவேலைகள் நடைபெற்று வருகின்றன.
 அண்மைக்காலமாக மிக அதிகமா கல் குவாரிகள் தோன்றி, தமிழக அரசின் கனிமவளப் பாதுகாப்புச் சட்டங்கள், தொல்லியல் துறையின்வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முதலியவற்றை மதிக்காமல் நம் வரலாற்றுத் தொல்சின்னங்களை அழியும் நிலைக்கு ஆளாக்கிவருகிறார்கள்.
இரவு பகலாக எப்போதும் மிகக்கடுமையான அதிர்வேட்டுகளையும் வெடிகுண்டுகளையும் வைத்துத் தகர்த்துவருவதால் சுற்றிலும் உள்ள ஊர்களில் வீடுகளும் குடிசைகளும் வெடிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. தனால்,  இந்திய, தமிழக தொல்லியல் துறைகளாலும் உலக நாடுகள் அவையாலும் வரலாற்றறிஞர்களாலும் பாதுகாப்பிற்குரியதாக அறிவிக்கப்பெற்றுள்ள  இச்சின்னங்களும் கற்குவாரிகளால் விரைவில் அழிந்துபோய்விடும் நிலை உள்ளது.

தரங்கம்பாடி மாசிலாமணிபுரீசுவரர் கோயில் கடல் அலைகளால் படிப்படியே அழிவதைத் தடுக்குமாறு பல ஆண்டுகளாக வரலாற்றறிஞர்களும் சமய அமைப்பைச் சார்ந்தவர்களும் குரல்கொடுத்துவந்தனர். அரசு  கவனிக்கவில்லை. இடிந்தேபோய்விட்டது. தஞ்சை மாரியம்மன் கோயிலில்  புதுப்பித்தல் என்ற பெயரில் நாயக்கர்மராட்டியர் ஓவியங்களின் மேலே வேறு ஓவியங்களை வரைந்து  விட்டார்கள். வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாக்கும் உணர்வு தமிழனுக்கு இல்லை. பழங் கற்காலமக்களின் கரிக்கையூர் பாறை ஓவியங்கள், சங்கக் காலத்திற்கு முற்பட்ட கீழ்வாலை ஓவியங்கள்தமிழகத்தின் முதல் கற்கோயில் ஆகிய மண்டகப்பட்டுமுதல் கட்டுமானக் கோயில் ஆகிய கூரம் சிவன் கோயில் ஆகியனவும் இப்படித்தான் பாதுகாக்கப்பெறாமல் உள்ளன. மண்டகப்பட்டு முதல் குடைவரை கோயில் என்பதை நிறுவும் கல்வெட்டு சிதைந்துபோய் உள்ளது. முதல் குடைவரை  கோயில் பனைமலையில் பல்லவ  அரசன் அரசியின் மிகப்பெரிய  ஓவியங்கள் பாதுகாப்பில்லாததால் பொது மக்களால் சிதைக்கப்பட்டுவிட்டன.

மதுரை திருபுவனம் அருகே மூவரைவென்றான் மலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்  குவாரி ஏலமெடுப்பவர்களால் வெடி வைக்கப்பட்டபோது மக்கள் தடுத்துவிட்டனர். கீழடி, ஆதித்தநல்லூர், குடியம், பல்லாவரம், அத்திராம்பாக்கம்  ஆகியவற்றின் அகழ்வாய்வுச் சின்னங்கள் காக்கப்பெறத் தமிழ் அமைப்பினரும் வரலாற்று ஆய்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 

            புதுக்கோட்டைமாவட்டத்தில் சித்தன்னவாசல்குடுமியான் மலைநார்த்தாமலைகடம்பர்மலை,  ஆளுருட்டிமலை ஆகியவை  வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. கற்காலக்குகைகள்புதை பொருள்கள்நடுகற்கள், சமண (ஜைன) குகைகள்புடைப்புச் சிற்பங்கள்,மூலிகை ஓவியங்கள்சங்கக் காலக் கல்வெட்டுகள்முற்காலச் சோழர்களின் கோயில்கள் ஆகியவை இங்குள்ளன. இவை கற்குவாரிகளின் கொள்ளையால் படிப்படியே சிதையும் நிலையில்  உள்ளன. தமிழகத்தில் உள்ள வரலாற்றறிஞர்களும், வரலாற்றார்வம் உள்ளவர்களும், தமிழ் அமைப்புகளும்  இப்போது வரலாற்றுச் சின்னங்கள் காப்பாற்றப் பெறவேண்டும் எனக்  குரல்கொடுத்து வருகின்றனர்.  

            கீழடி அகழாய்வு நடந்து, கிடைத்த பொருள்கள் பெங்களூர் போகின்றன என்றதும் மக்கள் எதிர்த்ததால் ஆய்வுக்காக டார்ஜிலிங் செல்கின்றன என்றனர். கீழடியிலேயே கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் நிலமும் தருவதாகத் தொல்லியல் துறை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்தார். அவை இருக்குமிடம் பற்றி உறுதியான தகவல் இல்லை; ஆதித்த நல்லூர் பற்றிய நூறாண்டுகளுக்கு முந்தைய ஆய்வறிக்கையும் அச்சிடப் பெறவில்லை; பொருள்கள் இருக்குமிடமும் தெரியவில்லை. குடியம் அருங்காட்சியகம் மக்கள் அதிகம் செல்லாததால் சிறப்பிழந்து உள்ளது.  அத்திரம்பாக்கம் ஆதித்தநல்லூர் அருங்காட்சியகங்கள் பொருள்கள் இல்லாமல் உள்ளன. திருவக்கரை கல்மரம் தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பல மரங்கள் காணாமல் போய்விட்டன;பெரம்பலூர் ஆலத்தூர் அருகில் உள்ள சாத்தனூர் கல்மரப்பூங்கா அருங் காட்சியகம் 25 இலட்சத்தில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளது. ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் 16 அடி நீளம் கண்டெடுக்கப்பட்டது; பழனி முருகன் சிலையைத் துருவியது போலச் சிறிது சிறிதாக வெட்டிச் சிலர் விற்று விட்டதால் இப்போது 12 அடி தான் உள்ளது.
.
            தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தில் உள்ள ஓவியங்கள், மக்களை அதிகம் பார்க்கவிடாமல் தடுக்கப்பட்டுக் காப்பற்றப் பெறுகின்றன; ஆனால் சுற்றுச் சுவர்களில் உள்ள நாயக்கர் மராட்டியர் கால ஓவியங்கள் பாதுகாப்பின்றி உள்ளன; மதுரையிலும் மற்றும் பல ஊர்களிலும் உள்ள கோயில் ஓவியங்களும் பாதுகாப்பின்றிப் படிப்படியே சிதந்து வருகின்றன. பனைமலை ஓவியம்போல எண்ணற்றன அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. சிலைகள், பழம் பொருள்கள் நிலைமையும் இதுதான். நீலமலை (நீலகிரி) கீழக் கோத்தகிரியில் உள்ள குரும்பர் இன மக்கள் வாழும் கரிக்கையூர் பரிவரை காட்டுப்பகுதியில் 8 கி.மீ. உள்ளே உள்ள ஏறத்தாழ கி.மு.10,000 க்கு முற்பட்ட ஆதிமனிதர்களின் பழங்கற்காலப்  பாறை ஓவியங்கள் பாதுகாப்பற்று உள்ளன. சுற்றுலாப்பயணிகளைக் கவர தமிழக அரசே மாமல்லபுரத்தின் பழைமையைக் கெடுத்தது போல, ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் மக்கள் பணத்துக்காகத் தாமே கூட்டிச் சென்று வருவதால் ஓவியங்கள் சிதைந்து வருகின்றன.



            வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அவை பற்றிய குறிப்புகளை விளம்பரப் பலகைகளில் எழுதிவைக்க வேண்டும்; பக்கத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஆங்காங்குள்ள தமிழ் அமைப்பினர், வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் , சமயப் பற்றாளர்கள், தொல்லியல் துறை வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் இவற்றைக் கண்காணித்து வரவேண்டும். வரலாற்றுச் சின்னங்கள் அழியாமல் காப்பாற்றப்பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் .

                              *******************************************************