வியாழன், 14 அக்டோபர், 2010
காலத்தை வென்றவர்களின் காலத்தை மறக்கலாமா?
தெளிதமிழ் இதழில் தி.ஆ. 2041, கன்னி, 1 (17-09-2010)
திரு.அகமுடை நம்பியின் கட்டுரை கண்டேன். தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் காலக் கணிப்பு செய்ய வேண்டியது கட்டாயமாகும் ஆனால் போதுமான தரவுகள் சான்றுகள் இல்லாததால் பலவற்றை நாம் முடிவு செய்யமுடியவில்லை . தமிழர்களுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது இருந்தாலும் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டியது நம் கடமை தான். வாழ்க்கை வரலாற்றை எழுதுவதும் நாட்குறிப்பு எழுதுவதும் நம்முடைய வழக்கம் இல்லை கொடை நிலைக்க வேண்டும் என்பதற்காக கல்வெட்டில் பதிந்தது நமக்கு ஓரளவு உதவியாக உள்ளது.
உலகம் முழுவதும் தொன்மையான பழங்கால வரலாற்றில் தரவுகள் குறைவுதான். கிடைக்கும் சான்றுகளை முதலில் அடித்தளமாக கொண்டு முன்னும் பின்னும் காலக்கட்டங்களை நிறுவுவது வழக்கம். புராண இலக்கிய செவிவழி செய்திகளையும் நார்போல் கொண்டு கட்டுவது வழக்கம். வரலாறும் கூட ஒருவகையில் புனைகதைதான் . கிறித்து பிறந்த ஆண்டு நாள் இவை கூட இத்தகைய கட்டுமானத்தில் பிறந்ததுதான். இதனை அடிப்படையாக்க் கொண்டு இன்றைக்கு உலக வரலாறு நின்று கொண்டு இருக்கிறது. பிற்காலத்தில் இந்தியாவில் பின்பற்றப்பட்ட சாலிவாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, பசளி ஆண்டு இவையெல்லாம் சரிவர அமையாதவை. 60 ஆண்டு பற்சக்கர முறை இன்னும் தெளிவு இல்லாதது. பல்லவர் காலத்தில் இருந்து நமக்கு கல்வெட்டுகளும் செப்பெடுகளும் நிறைய கிடைப்பதால் முன்னும் பின்னும் காலக்கணிப்பை நம்மால் செய்யமுடிகிறது. சங்ககாலத்திய கல்வெட்டுகளும் இப்போது கிடைக்கின்றன .
இந்திய வரலாற்றிலும் குப்தர் மோரியர் காலங்கள் ஒரளவுக்கு கனிக்கப்பட்ட பிறகு பிறகாலங்கள் முன் பின்னாக கோத்து அமைக்கப்பட்டன. பாணினி காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்று உறுதி செய்யப்பட்ட்தை வைத்து தொல்காப்பியர் காலம் அதற்கு முந்தையது என்று வரையறை செய்தார்கள். திருவள்ளுவர் காலத்தை சென்னையில் மறைமலை அடிகள், திரு.வி.க, சோம சுந்தர பாரதியார், கா.நமசிவாய முதலியார் முதலிய பேரறிஞர்கள் கூடி முடிவு செய்தார்கள். இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஊக்கமும் மக்கள் எழுச்சியும் ஏற்படுவதற்காக பிள்ளையார் விழா, காளிவிழா முதலியவற்றை தேசிய விழாவாக இந்தியா முழுவதும் பரப்பினர். அதே போலத் தமிழர்களுடைய தொன்மையான இலக்கியத்தைச் செய்த திருவள்ளுவர்க்கு விழா கொண்டாடுவதும், பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்று கொண்டாடுவதும் ஊக்கம் தந்தன. அதே நேரத்தில் காலக்கணிப்பு செய்வதும் நமக்கு கட்டாயம் அல்லவா? கடவுள் ஆகிய இராமருக்கும் , கிருட்டிணருக்கும் பிறந்த நாள் கொண்டாடுகிற போது, தெய்வப் புலவர் திருவள்ளுவருக்குக் கொண்டாடுவது தவறா? இராமர் பிறந்தது 17 இலட்சம் ஆண்டுகள் முன் என்று அவர்கள் கூறும் போது, நம் நாட்டுப் பேரறிஞர்கள் திருவள்ளுவர் பிறந்ததுகிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன் என்று வரையறை செய்தது தவறா?
திருவள்ளுவருடைய உருவச் சிலை மயிலை திருவள்ளுவர் கோயிலில் உள்ளது. சிவமதமாக அடையாளம் காட்டப்பட்டிருப்பதால் அவ்வடையாளம் நீக்கிய திருவள்ளுவர் உருவத்தை வரைந்தனர். தமிழக அரசு சார்பில் இன்னும் சிறிது மெருகேற்றி வரையப்பட்டது. அண்மைக் காலத்துப் பாரதியாருடைய உருவமே பல வகையாக வரையப்படவில்லையா? எனவே மக்களிடம் தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரை அடையாளம் காட்ட படங்களும் உருவச் சிலைகளும் தேவைதான்.
திருவள்ளுவரும் தொல்காப்பியரும் தாம் பிறந்த நாளை கொண்டாடச் சொன்னார்களா? என்று கட்டுரை ஆசிரியர் அகமுடை நம்பி எழுதி உள்ளார். பிள்ளையாரோ இராமரோ தாம் பிறந்த நாளைக் கொண்டாடச் சொன்னார்களா? பிறந்த குழந்தைக்குப் பெயரிடு விழாவும் பிறந்த நாள் விழாவும் கொண்டாடுகிறோமே, அந்தக் குழந்தை நம்மிடம் கொண்டாடக் கட்டாயப்படுத்தியதா? நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் ஒற்றுமைக்காகவும் நாம் கொண்டாடுகிறோம். ஆகவே தமிழருடைய இன ஒற்றுமை எழுச்சிக்கும் ஊக்கத்துக்கும் பிறந்த நாள் விழாக்கள் உதவுகின்றன. காலக்கணிப்பு வரலாற்றுக்கட்டுமானத்திற்கு உதவுகிறது.
- முனைவர். பா.இறையரசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையான கருத்தைப் படித்ததில் மகிழ்ந்தேம்
பதிலளிநீக்குயாரோ ஒர் முனிவன் கூறியதை நம்பும் இவர்கள் இராமனை பார்த்தார்களா என்றால் இல்லை, அல்லது இராமனுடைய உருவத்தை பார்த்தார்களா என்றால் அதுவும் இல்லை, சரி இராமனுடைய எதாவது படைப்பாவது உண்டா அதுவும் இல்லை. ஆனாலும் இராமனை நம்புகிறார்கள். இங்கு திருவள்ளுவனுடைய படைப்பு "உலகப் பொது மறை திருக்குறள்" உலகெங்கும் உள்ள அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இவர்கள் திருவள்ளுவனை சந்தேகிக்கின்றார்கள். இவர்கள் திருந்த மாட்டார்கள்.
பதிலளிநீக்கு