வெள்ளி, 17 டிசம்பர், 2010
சங்க இலக்கியங்கள் தேவையில்லையா?
சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் சுவையற்றன என்றும் மிகச்சில மட்டுமே கவிதைத்தன்மை கொண்டவை என்றும் திறனாய்வாளர்கள் சிலர் பேசிவருகின்றனர். அரசர்களைப் புகழும் அவை , மக்களைப் பாடாததால் இன்றைய மக்களுக்குப் பயனில்லை என்றும் ஆற்றுப்படை நூல்கள், சேர அரசர்களைப் பாடும் பதிற்றுப்பத்து முதலியன அறவே தேவையற்றன என்று ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர். அண்மையில் கல்லூரி ஒன்றில் நடந்த கருத்தரங்கில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒருபெண்மணி, சங்கக்காலத்தில் நில உடைமை முதலாளித்துவத்தை வளர்த்துவிட்ட அரசர்களையும் பணக்காரர்களையும் பொய்யுரைகளால் புகழ்ந்து பாடித் தம் வயிற்றை நிரப்பிய வறிய புலவர்கள் பாடிய பாடல்களே சங்க இலக்கியங்கள்; இவை சமுதாயச் சிந்தனை அற்றவை என்று புரட்சிமுழக்கம் செய்தார்.
கவிதைத் தன்மை, மார்க்கசியம், வர்க்கம், முற்போக்கு என்றெல்லாம் இவர்கள் கூறுவன வெற்றுச் சொற்கள். திறனாய்வியல் கொள்கைகளையும் பெரியாரியம், மார்க்கசியம் , காந்தியம் போன்ற கோட்பாடுகளையும் படிக்காமல் தங்களை மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகப் பல தளங்களில் சிதைக்கும் தாக்குதல் பேச்சுக்களைப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் மிகத் தொன்மையான சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடலை வெற்றுச் செய்யுள் என்று கூறுவதும், கவிதை அல்லாததால் இலக்கியத்துக்குச் சுமை என்றும் மாணவர்க்குப் பாரம் என்று கூறுவதும் தாயையும் தந்தையையும் பாரம் என்று கூறி முதியோர் இல்லத்துக்கு விரட்டும் தன்மையாகும்.
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில் இத்தகைய செய்யுள்களின் தேவை என்ன ?” -
என்கின்றனர் இப்புதிய திறனாய்வாளர்கள். புராண, வரலாற்றுப் பாத்திரங்களின் உணர்வுகளையும் வாழ்க்கை நடைமுறைகளையும் அக்கால அரசர்களின் செயல்களையும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் முன்னைய வாழ்க்கை முறைகளையும் பாடும் இலக்கியங்களைச் சுமை என்று எந்த நாட்டு மக்களும் ஒதுக்கி விடவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைமுறை என்பதால் கிரேக்கக் காப்பியங்களை யாரும் சுமை என்று கூறவில்லை. வேல் எடுத்துப் போர் புரிவதைக் கூறும் இப்பாடல் சுமை என்றால், வில் எடுத்துப் போர்புரியும் கதைகூறும் கம்பராமாயணம் சுமையாகுமா?
இராண்டாயிம் ஆண்டுகள் முன் பாடியதால் அச்சமுதாய முறை மாறிவிட்டது என்றால், இருநூறு ஆண்டுகள்முன், ஏன், இருபது ஆண்டுகள் முன் பாடியனவும் சமுதாய முறை மாறிவிட்டதால் பயனற்றுப் போய்விடுமே! இந்திய விடுதலைக்காகப் பாடிய பாரதியின் ‘தேசியப் பாடல்கள் போய்விடும்; பக்திப் பாடல்கள்தான் நிலைக்கும்’ என்று சிலர் கூறினர். தேசியப் பாடல்கள் இன்று ஒதுக்கப்பட்டு விட்டனவா? பிசித் தீவில் இந்தியப் பெண்களின் கண்ணீர் பற்றிப் பாரதி பாடிய பாடலுக்கு இன்றும் நாம் கண் கலங்குகிறோம்.
மொழி, இனம், மதம், காலம், வாழ்வியல்முறை – எல்லாம் மீறி உருவாகுவதே இலக்கியம். டென்னிசன் என்றோ எங்கோ அறுவடை செய்யும் தம் நாட்டுப் பெண்ணைப் பற்றி பாடியது, நம் நாட்டுப்புறப் பெண்களை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு இலக்கியங்களில் இருநூறு ஆண்டுகட்கு முற்பட்ட வாழ்க்கை முறை அவர்களுக்கே கூட மாறிப்போய்விட்டது; நாமும் அப்பாடல்களில், நம் நாட்டு இன்றைய கால வாழ்க்கை முறையோ, அரிசிச்சோறு உணவு முறையோ, சேலை வேட்டி உடைமுறையோ இல்லாததற்காக அவை கவிதை இல்லை என்று ஒதுக்குவதில்லை; தலைக் கவசமும் (ஹெல்மட்) குதிரைப் போரும் பற்றி அவை பாடுவதால் இலக்கியம் இல்லை என்று கருதுவதில்லை.
புறநானூற்றில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் நலங்கிள்ளியும் பாடியுள்ள வஞ்சினக் காஞ்சிப் பாடல்களும், சூலியசு சீசர் என்னும் ஆங்கில நாடகத்தில் அந்தோனியின் வீரவுரையும், மனோன்மணியம் நாடகத்தில் சீவகனுடைய வீரவுரையும் படிக்கும்போது அவற்றின் இலக்கியத் தன்மையை காலம், இனம், மொழி கடந்து போற்றுகிறோம். அக்காலப் போர்முறை இன்று இல்லை என்பதால் இவை கவிதை இல்லை என்று நாம் ஒதுக்குகிறோமா?
வாழ்வியல் கூறும் “ஈன்று புறந்தருதல்...” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைச் செய்யுள் என்றும் சுமை என்றும் ஒதுக்க முடியுமா? சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்தி, மறக்குலத்தாய் ஒருத்தி பாடிய இப்பாடல் எக்காலத்துக்கும் உரிய இலக்கியத் தன்மை கொண்டது.
ஒரு தாய்க்கு எந்த அளவுக்குக் குடும்பப் பொறுப்பும் நாட்டுப் பொறுப்பும் அன்று இருந்தன என்பதையும் இன்றும் இருக்க வேண்டும் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. அரசன், கொல்லன், வேல் முதலியன இன்று – அரசு, தொழிற்சாலை, கருவி முதலியவற்றைக் குறித்து, நமக்குக் கடமை உணர்வைத் தருவனவே. எனவே இப்பாடல் கவிதை ஆகாதா? சுமையா? கவிதை என்பது வரலாற்றுத் தகவலையோ சமுதாய அறத்தையோ தரக் கூடாதா?
“இளையோர் சூடார்....” என்ற புறநானூற்றுப் பாடலில்” சாத்தன் ஆகிய தலைவன் இறந்தபின், முல்லை மலரே, நீ ஏன் பூத்துள்ளாய்?” என்ற கருத்து சோக அனுபவம் என்பதால் கவிதை ஆகிறது. ஆனால் நாட்டுத் தலைவனை இழந்த துயரமும் காதலியை இழந்த துன்பமும் மட்டுமே வாழ்க்கை உணர்ச்சிகளா? அவற்றைப் பாடுவன மட்டுமே கவிதையா?
“பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி ஒரு மகனல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் “செல்கென விடுமே” என்னும் புறநானூற்றுப் பாடலிலும், “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” என்னும் பாரதிதாசன் பாடலிலும் கவிதையியலை உணர இயலாதா?
எல்லோருக்கும் எல்லாப் பாடல்களும் சுவைக்கும் என்று சொல்ல முடியாது. அவரவர் அணுகுமுறை, கொள்கை, தரம், தேவை, விருப்பம் முதலியன வேறுபடுகின்றன. ஆயின் இலக்கியத் திறனாய்வாளன் சார்பு இல்லாமல் விழிகாட்ட வேண்டும். புதுமைப்பித்தன், நகுலன், வாசுகி, குட்டிரேவதி முதலியவர்கள்தான் சிறந்த கவிஞர்கள் என்கின்றனர். இவர்கள் எதைக் கவிதை என்று ஏற்கிறார்கள் என்று உணரலாம். பாரதி, பாரதிதாசன் ஆகியோரையும் அவர்களுக்கு முந்தையவர்களையும் மூட்டைகட்டி எறிந்து விடலாமா? இக்காலக் கவிஞர்களிலும் சுரதா, தமிழன்பன், வைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமான், இன்குலாப், மீரா, சிற்பி, புலமைப்பித்தன், நா.காமராசன், பொன்னடியான், தமிழ்நாடன் ஆகியோர் கவிஞர்கள் இல்லையா?
இவர்கள் சிறந்த கவிதை என்று காட்டும் புதுக்கவிதையாகிய உரைவீச்சுகள் புறநானூற்றுப் பாடல்களின் முன், இன்னும் சொன்னால், புறநானூற்றின் இறுதிப் பகுதியில் வரும் வரி சிதைந்த பாடல்கள் ஏதேனும் ஒன்றின்முன்கூட, நிற்கத் தகுதி அற்றவை.
இக்காலப் புதுக்கவிதை என்னும் உரைப் பாக்களில் பல நல்ல கருத்துகளும் சில நல்ல உருவகங்களும் கொண்ட சில தேறுகின்றன. அதற்காக அவை மட்டுமே கவிதைகள், சங்க இலக்கியங்கள் இல்லை என்று தமிழ் மக்களுக்குத் தவறான வழிகாட்ட வேண்டிதில்லை.
வெற்றுச் சொல்லடுக்குகளும், எல்லையற்ற பிறமொழிச் சொற்களும், தெளிவில்லாத படிமங்களும், இருண்மையும், தத்துவம் போன்ற பிதற்றல்களும் இன்று புதுக்கவிதை என்று பெருகிவரும்போது, அவற்றை இனங்காட்டவோ திறனாயவோ திருத்தவோ முற்படாமல், இரண்டாயிரம் ஆண்டுகளாக காலத்தை, கரையானை, எதிரிகளை வென்று நின்று வாழும் சங்கத்தமிழ் இலக்கியங்களைக் குறைசொல்ல வேண்டாம்.
- முனைவர் பா.இறையரசன்
காற்றுவெளி திசம்பர் 2010 இதழில் வெளிவந்தது: http://kaatruveli-ithazh.blogspot.com/
*****************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக