ஞாயிறு, 30 ஜனவரி, 2011

இன்று 30-01-2011 மாலைமுரசில் வெளிவந்துள்ள அறிக்கை:

இணையத்தில் தமிழை அழிக்க முயற்சி யூனிகோடு அமைப்பில் சேர தமிழக அரசு தமிழக அரசு தாமதம்! இணையத்தில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தி அழிக்கமுயற்சி நடக்கிறது. இது தொடர்பாக யூனிகோடு அமைப்பில் சேர தமிழகரசு தாமதம் செய்கிறது என்று தமிழ் எழுச்சிப்பேரவை கூறியுள்ளது. தமிழில் கலந்த அரபு உருது சமற்கிருத சொற்கள் படிப்படியே நீங்கி மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தால் செந்தமிழ் ஆகியது. ஜாஸ்தி, கச்சேரி, வக்கீல், ஜமீன், சர்க்கார், வாயிதா முதலிய அராபிய பாரசீக உருதுச் சொற்கள் நீங்கின. ஆனால் கலெக்டர், கவர்மென்ட், ஸ்கூல், எனப் பல சொற்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குள் புகுந்து இயல்பான வழக்குச் சொற்களையும் அகற்றித் தமிழைத் தமிங்கலம் ஆக்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து தமிழில் மிக அதிகமான சமற்கிருதச் சொற்கள் புகவேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். சமற்கிருதநூல்களைக் கணினியில் கொண்டு வருவதற்காக 26 கிரந்த எழுத்துகளை தமிழ் ஒருங்குகுறி(யுனிகோடு)யில் சேர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்தைச் சார்ந்த இரமணசர்மா அமெரிக்காவில் உள்ள ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு எழுதினார். கிரந்த எழுத்துகளில் தமிழின் சிறப்பெழுத்துகளாகிய ற, ன, ழ, எ, ஒ ஆகிய 5 எழுத்துகளை சேர்க்க வேண்டும் என்று நா.கணேசன் என்பவர் எழுதினார்.தமிழின் சிறப்பெழுத்துகளையும் சேர்த்து 89 கிரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் கொண்டுவரவேண்டும் என்று இந்திய அரசு எழுதியது. கிரந்தம் புகுத்தப்படுகிறது என்று வெளியில் தெரியவே நாளாயிற்று. தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தம் புகக்கூடாது; கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழ்க் காப்பு அமைப்புகள் எதிர்த்தன. தமிழ்ப்பல்கலைக் கழகத்துணைவேந்தர் ம.இராசேந்திரனும், இணையக்கல்விக்கழக இயக்குநர் நக்கீரனும் உடன் அரசு சார்பில் அறிஞர்களைக்கூட்டிக் கருத்தறிந்து அரசுக்குத்தெரிவித்தனர். கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு 06–11–2010 அன்று இந்திய அரசுக்கு எழுதியது..அதனால் கிரந்தம் பற்றி முடிவெடுப்பதை அமெரிக்க நிறுவனம் 06-02-2011 வரை நிறுத்திவைத்துள்ளது.. நாள் நெருங்கியது ஒருங்குகுறிச் சேர்த்தியத்திற்குக் கருத்து தெரிவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது! இப்போதுதான் தமிழக அரசு கருத்தறிந்து தெரிவிக்க வல்லுநர் குழு எற்படுத்தியுள்ளது. ஆனால், 07-02-2011 நடைபெற உள்ள கூட்டத்தில் கருத்து தெரிவிக்க, ஒரு வாரம் முன்னரே எழுதியனுப்ப வேண்டும். தமிழக அரசு இதுவரை சேர்த்தியத்தில் உறுப்பினராகவில்லை. தன் கீழுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தையோ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தையோ ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட சேர்க்கவில்லை. தமிழில் வழிபாடு, தமிழ்வழிக்கலவி, அனைவரும் அர்ச்சகராகலாம் முதலிய பல திட்டங்களில் குழு அமைத்ததோடு, அல்லது வழக்கு மன்றத்தில் நிறுத்தியதோடு அவற்றை நிறைவேற்றாமல் விட்டுவிட்டது தமிழக அரசு. அதேபோல் இப்போதும் தூங்கிவிடாமல் இன்னும் இரண்டு நாளில் எழுத வேண்டியிருப்பதால், உடனடியாகத் தமிழக அரசு வாக்குரிமையுடன் கூடிய உறுப்பினராக வேண்டும்; தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் முதலிய அமைப்புகளையும் உறுப்பினர்களாகச் சேர்த்துத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக