“மொழி என்பது அந்த இனத்தின் முகவரி” என்பர்
கொள்கைப் பெரியார். பேரறிஞர் அண்ணா அவர்கள் “மொழி என்பது அந்த இனத்தின் விழியாகும்;
விழி இழந்தவன் வழியை இழக்கிறான். மொழியை இழந்தவன் வாழ்க்கை வழியினையே இழக்க நேரும்”
என்கிறார்.
அண்ணாவே மேலும், “பண்பாட்டையும் காத்துக்கொள்ள
வேண்டும்; மரபு என்பதே தமிழர்க்கு மறந்து போய்விட்டது” என்பார். தமிழ்நாட்டில் தமிழன்
வேட்டியைக் கட்டக்கூடாது என தடுக்கும் நிலை உள்ளது கொடுமைதானே!
1. சென்னை
சேப்பாக்கம் விளையாட்டு அரங்கத்தில் நுழையவும் அங்குள்ள சிற்றரங்கத்தில் நடக்கும் குடும்ப
நிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் தமிழ்ப் பண்பாட்டு உடையாகிய வேட்டியைக் கட்டிக் கொண்டு வரக்கூடாது என்ற விதியைக்
கடுமையாகக் கடைப் பிடிக்கிறார்கள்.
தமிழ்
நாட்டில் தமிழ் மண்ணில் தமிழர்கள் தங்களின் பண்பாட்டு உடையில் வருவதை தடுக்கும் இவ்விதியை
மாற்றுவேண்டும்.
2. தமிழகத்தில்
1930-இல் இருந்தே தமிழைக் காக்க இந்தித் திணிப்பை எதிர்த்து நூற்றுக்கணக்கான உயிர்களைப்
பலிகொடுத்துக் களம் கண்டிருக்கிறோம். ஆனால்
இப்போது மெல்ல மெல்ல இந்தி திணிக்கப்பட்டு வருகிறது
எடுத்துக்காட்டாகத்
தொடர்வண்டித் துறையில் முன்பதிவு செய்வோருடைய பெயர்ப்பட்டியல் இதுவரை ஆங்கிலத்தில்
மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது முதலில் இந்தியும்
அடுத்து ஆங்கிலமும் உள்ளன. தமிழ் நாட்டில்
முதலில் தமிழும் அடுத்துப் பிறமொழியும் இடம் பெற வேண்டும்.
3. தமிழகத்தில்
அரசுத்துறைகளில் கட்டப்படும் வீடுகளுக்குப் பெயர்கள். ‘அ’ என்றும் ‘ஆ’ என்றும் தமிழ்
எழுத்துகளிலேயே பெயர் இடல் வேண்டும்.
ஆங்கிலம்
போன்ற பிறமொழி எழுத்துகளில் வீடுகளுக்குப் பெயர் வைத்தால் தமிழர்களை தமிழ் மொழியை மறக்கச் செய்வதாக அமைந்துவிடும். எனவே இந்தச் செய்திகளை யாரோ சிலர் சொல்கிறார்கள்
என்று இருந்து விடாமல் தமிழ் எழுத்தில் பெயரிட வேண்டும்.
தொலைக் காட்சி
பிறமொழிக் கலப்பு
ஒருமொழியைப் பல்வேறு மொழிகளாகச் சிதைத்து ஓர் இனத்தையே பல்வேறு இனங்களாகச் சிதறடித்து
விடும்.
எடுத்துக் காட்டாகத்
தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து மணிப்பவழ (பிரவாள) நடையில் பேசியதாலும் எழுதியதாலும்
தமிழே பல்வேறு இனமொழிகளாகச் சிதைந்தது. அதற்கு
ஏற்ப இன்று தமிழினமே இந்தியாவில் பல்வேறு இனங்களாக உள்ளது என்று பேரறிஞர் அண்ணா, அம்பேத்கார்,
பி.தி. சீனிவாச ஐயங்கார், ந.சி. கந்தையாப் பிள்ளை, சி.இலக்குவனார் முதலிய பேரறிஞர்கள்
கூறியுள்ளனர்.
தமிழில் பிறமொழி
கலக்காமல் இருந்திருந்தால் இன்று தமிழ்மொழியும் தமிழினமும் 120 கோடிக்கும் மேல், மக்கள்
உள்ள - மக்கள் பேசும் மொழியாகச் - சீனமொழியை
விட அதிகம் பேசுவோர் கொண்டதாக - விளங்கியிருக்கும்.
எனவே ஒரு மொழியில்
பிறமொழிக் கலப்பு என்பது, அந்த இனத்தைப் பிளவுப்
படுத்தவும் அடிமைப்படுத்தவும் செயலற்றவர்களாக ஆக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை
உணர்த்தத் தமிழகத்தில் தமிழர்களுக்காக நடத்தப்படும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளின்
தலைப்புகளையும் உரையாடல்களையும் பெயர்களையும் பிறமொழிக் கலப்பு இல்லாமல் நல்ல தமிழிலேயே
அமைக்குமாறு வேண்டுகிறோம்.
செய்தி
வாசிப்பவர்களும் அறிவிப்பாளர்களும் தமிழ் ஒலிகளைத் தவறாகச் சொல்கிறார்கள்; இத்தவறுகள்
குழந்தைகளையும் மாணவர்களையும் எளிதாகச் சென்றடையும்.
இத்தவறுகளை
நீக்கி நன்றாக ஒலிப்பதற்குத் தமிழ்ச்சான்றோர் பேரவை சார்பில் நா.அருணாசலம் அவர்கள்
தமிழ் மரபுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழைத்தமிழாக்குவோம் என்று கூறும்
நன்னன் அய்யா, திருவள்ளுவர் தவச்சாலை இளங்குமரனார், தென்மொழி இறைக்குருவனார் முதலிய பேரறிஞர்களைக்கொண்டு, இப்போது நாமும் தமிழ்
ஒலிகளைத் தவறின்றி ஒலிக்க உணர்வை ஏற்படுத்தவும் பயிற்சிக்கு வாய்ப்பை ஏற்படுத்தவும்
வேண்டுகிறோம்.
திரைப்படம்
தமிழ்
வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் வாழமுடியும்
என்று நாம் உள்ளூர உணர்ந்திருக்கிறோம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி உள்ளார்கள்.
அந்தக்
காலத் திரைப்படங்கள் நல்ல தமிழில் சிறந்த உரையாடல்களோடும் தமிழ் மரபுகளோடும் வெளிவந்தன. சிறந்த ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும்
உருவாக்கிய உருவாக்கிவருகிற திரைப்படத்துறை தன்னுடைய பாடல்களிலும் உரையாடல்களிலும்
பெயர்த்தலைப்புகளிலும் பிறமொழிக் கலப்பைக் கொண்டிருப்பது சரியா?
காட்டுமிராண்டித்
தன்மை என்பதற்கு விளக்கம் சொல்கிறபோது ஆக்சுபோர்டு அகராதி பிறமொழிக் கலப்பு காட்டுமிராண்டித்
தனம் என்கிறது. எனவே திரைப்படத் துறையினர் குறிப்பாகப் பாடல் ஆசிரியர்களும் உரையாடல்
ஆசிரியர்களும் பிறமொழிக் கலப்பில்லாமல் நல்லதமிழில் எழுத வேண்டுகிறோம்.
-
தெக்கூர் ந. தமிழ்த்
தென்றல்,
பாவாணர் தமிழ்ப் பயிற்றகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக