செவ்வாய், 6 மே, 2014

பெரியார் தமிழ் மொழி, தமிழ் இன எதிரியா ?

பெரியார்

தமிழ் மொழி, தமிழ் இன எதிரியா ?
                                                                            -    முனைவர் பா.இறையரசன் 

முல்லைப் பெரியாறு என்பதைக்  கேரளர்கள்முல்லா பெரியார்என எழுதித் தமிழர்களிடமிருந்து வேறுபடுத்த முற்படுவர். தமிழர்கள் இதுவரைதந்தை பெரியார்என அழைத்த தலைவரை இன்றுவந்தேறிஎன்றும் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் இரண்டகர் (துரோகி)’ அதனால் அவர் பெரியார் இல்லை, சிறியார் என்றும் எழுதி வருகின்றனர். திராவிடத் தேசியம் பேசியும், தமிழைத் தாக்கியும் பெரியார் பேசியவை தமிழ்த் தேசியத்தை வளரவிடாமல் தடுத்து விட்டது என்பது அவர்களது குற்றச்சாட்டு. பெரியார் தமிழ் மொழிக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராகத்  திராவிடத் தேசியம், திராவிடக் கழகம், திராவிடக் கட்சிகள் ஆகியவற்றை வளர்த்திருந்தால் அவரது செயல்பாடுகள் தவறானவையே.

பெரியாரது கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் தவறு எனக் கண்டதைத் திறனாய்வு செய்ய கூடாது, குறை சொல்லக் கூடாது என்பதும் தவறு. தம்முடைய கருத்துகளில் தவறோ குற்றமோ இருப்பின் அதைத் தவறு, குற்றம் என்று காணக் கூடிய பகுத்தறிவும் திறமையும் மிக்கவர்கள் பிற்காலத்தில் தோன்றுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார் பெரியார். எனவே பெரியாரின் கருத்துகளில் குறை இருப்பின் கூறுவது தவறில்லை.

பெரியார் தமிழ் மொழி இலக்கண இலக்கியம் முறைப்படிப் படித்தவர் இல்லை. அவர் பகுத்தறிவு, தன்மானம், கடவுள் மறுப்பு ஆகிய நோக்கில் சிந்தித்த நாத்திகர். அவரது பார்வையில் மொழி என்பது ஒரு கருவி. எனவே மொழியைத் தாக்கியோ, தூக்கி எறிந்தோ அவர் பேசியவற்றை  நாம் ஏற்க வேண்டியது இல்லை. மொழி பற்றிய தமிழரின் முடநம்பிக்கையையும் செயலின்மையையும் சாடுவதற்கு அவர் கடினமான தாக்குதல் சொற்களைக் கையாண்டார். அது மதத்தையும், கடவுளையும், மக்களை முடநம்பிக்கையில் ஆழ்த்திய பார்ப்பனர்களையும் எதிர்த்து  வீசிய கடுநடை வடிவம்ஆகும்.   மிக மிகுதியான      அறியாமையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் மூழ்கிக் கிடந்த படிக்காத எளிய  ஏழை மக்களைத் திருத்த, மிகக்  கடுமையாகவும்  அழுத்தமாகவும் சொற்களைப் பயன்படுத்தினார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னால் தான் உயர்ந்த சாதி என்பதால் பார்ப்பன சாதிச்சிறுவன் தாழ்ந்த சாதிப் பெரியவர்களை மூத்தவர்களைக் கூட “ …. வாடா   ……….போடா……..” என்றுதான் பேசுவான்மற்ற சாதிக்காரர்களை “ …. வா…………போ….” என்றுதான் பேசுவான்மற்றவர்கள் அவர்களை அழைக்கும்போது சிறுவனாக இருந்தாலும், தன்னைவிட குறைந்த படிப்பு பதவியில் இருந்தாலும் ஏன்  உணவகத்தில் பரிமாறுபவனையும்சாமிஎன்றுதான்  சொல்லவேண்டும். இதை விட இழிவான கொடுமைகள் இருந்தன. அத்தகைய கொடுமைகளைப் போக்கி நம்மை மானம் மரியாதையோடு வாழச் செய்தவர் பெரியார்.

பார்ப்பனர்களின் கொடிய வருணாசிரமத் தீமைகளுக்காக அவர்களைச் சாடினாரே தவிர எந்தவகையிலும் அவர்களைத் தாழ்த்தவில்லை. எந்தச் சாதியாக இருந்தாலும் பார்ப்பனர்களாக இருந்தாலும் சிறுவர்களாக இருந்தாலும்வாங்கஎன்று மரியாதையோடுதான் பேசுவார்.  “பாம்பைக் கண்டால் கூட விட்டுவிடு; பார்ப்பானைக்  கண்டால் அடி!” என்பது தொடக்கக் காலத்தில் அவர்களது நச்சுக் கருத்துகளுக்காக அவர் பேசிய கடும் பேச்சே! பார்ப்பனர்களை அடிப்பதையோ இழிவுபடுத்தியதையோ அவர் என்றும் ஏற்றதில்லைதிருவையாற்றில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார்; தெருவிலோ குளக்கரைகளிலோ  பாதுகாப்பற்றிருக்கும் எந்தப் பிள்ளையார் சிலைகளையும் அவர் உடைக்கச் சொல்லவில்லை

தமிழ் மொழியின் எதிரியா?
            ‘தமிழைக் காட்டுமிராண்டி மொழிஎன்றார் பெரியார். ‘கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்என்றார்; பெரியபுராணத்தையும் திருக்குறளையும் குறை கூறினார்; ஆங்கில மொழியைப் படி என்றார்;  வீட்டு வேலைக்காரியிடமும் ஆங்கிலம் பேசு என்றார் -  இத்தகைய குற்றச்சாட்டுகள் வெகுநாளாய்ப் பெரியார் மேல் கூறப்படுகின்றன.

            ‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறுவது தமிழை உயர்வு செய்வதே; மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலேயே பேசப்பட்ட மொழிஎன்று பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு ஒருவர் பேசினார். அடுத்து பேசிய பெரியார்இதெல்லாம் ஏமாற்று. நான் உண்மையிலேயே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றுதான் சொன்னேன்என்றார். இதனால் அவரது உண்மைத் தன்மையும் பொய்யாக போலியாக நடிக்காதபேசாத மாற்றி ஏமாற்றி பேசாத தன்மையும் வெளிப்படுகின்ற

            எங்கள் கல்லூரியில் (தஞ்சை பூண்டி புட்பம் கல்லூரியில்) பெரியார் வந்திருக்கிறாரே என்று விழா தொடங்கும் போது கடவுள் வாழ்த்துப் பாடும் மரபை மாற்றித் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினர். அப்போது தம் உடலில் சிறுநீரகத்துடன் பொருத்தியிருந்த சிறுநீர் வாளியுடன் எழுந்து நின்ற பெரியார், பேசும் போது, ‘மூட நம்பிக்கையை எதிர்ப்பவன் நான் என்பதால் எனக்காகக் கடவுள் வாழ்த்துப் பாட வில்லை என்று நினைக்கிறேன்; மொழி வாழ்த்தும் ஒரு மூட நம்பிக்கைதான்என்றார்.

            மொழி வாழ்த்து ஒரு மூடநம்பிக்கையாகத்தான் இருக்கிறது என்பதும் உண்மைதானே! ‘தமிழ் வாழ்க!’ ‘தமிழ் வாழ்க!’ என்று வாய் கிழியக் கத்துகிறான் தமிழன்; தமிழ் வளர்ச்சிக்கு உரியவற்றைப் புறந்தள்ளுகிறான். ஆனால் கன்னடன், மலையாளி தம் மொழி வாழ்கஎன்று கத்துவதில்லை; வளர்ச்சிக்கு வேண்டியவற்றைச் செய்கின்றனர். நாம் தமிழ்ப் பள்ளிகள் தமிழ் வழிக்கல்வி ஆகியவற்றைத் தொடக்கடப்பள்ளி அளவிலே கூட மூடிக் கொண்டு வருகிறோம்; மறுபக்கம் 100 கோடியில் தமிழ்த் தாய் சிலை! அச்சிலைக்கு பார்ப்பனனை வைத்து சமற்கிருதத்தில் பூசை நடத்தினாலும் வியப்பதற்கில்லை.

            பெரியார் தமிழ் இலக்கியங்களைச் சாடினார்; கம்பராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்றார்எனில் அதற்குக் காரணம் அவை மூட நம்பிக்கையைப் பரப்புகின்றன என்பதைவிட தமிழர்களுக்கு எதிரானவை என்பதாலேயே அவற்றை எதிர்த்தார். அதனால்தான்இராவண லீலாநடத்தி இராவணன் பொம்மையைக் கொளுத்தும் வடநாட்டார் தில்லியில் பெரியார் மையத்தை இடித்தனர்.

            பெரிய புராணம், இராமாயணம் பாரதம் ஆகியவற்றில் உள்ள குறைகளை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட எடுத்து எழுதியுள்ளனர். எனவே மூடநம்பிக்கை, ஒழுக்கக் கேடு முதலிய இழிவுகள் இப்புராணங்களில் இருப்பதை சமயத்துறை சார்ந்தவர்களே அசிங்கமாக நினைத்து ஒதுக்கிவிட்டனர். திருக்குறளில் உள்ள பெண்ணியம், ஊழ்வினை பற்றிய சில கருத்துகளைத் திறனாய்வாளர்கள் குறை கூறியுள்ளனர். திருக்குறளைக் குறை கூறினாலும், அதிலுள்ள பெரும்பான்மை உயரிய கருத்துகளைப் போற்றித் திருக்குறள் மாநாடு (1948) நடத்தியவர் பெரியார்.

            தமிழ் மொழி வளர்ச்சிக்காக எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் என்று கூறியதுடன் அதனைத் தம் விடுதலை இதழில் செயற்படுத்தியவர். தமிழில் அறிவியல் தொழில் நுட்பக் கருத்துகள் வர வேண்டும் என்று இடைவிடாது கூறியவர். பெரியாரின் நண்பர் கோ. து. நாயுடு (ஜி. டி. நாயுடு) அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழகத்துக்குக் கொடுத்தவர்.

            இந்தியை எதிர்த்து மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பாவாணர் ஆகியோர் போராடினர். அவர்களுக்குத் துணையாக நின்று பின் அப்போராட்டத்தினை ஏற்று நடத்தியவர் பெரியார். மறைமலையடிகளும், பாவாணரும் ஆங்கிலம், சமற்கிருதம் ஆகியவற்றை எதிர்க்கவில்லை. அவற்றைக் கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.

            பெரியார் அறிவியல் நுட்பங்கள் தமிழில் வர ஆங்கிலக் கல்வி தேவை என்பதைக் கூறியுள்ளார். மேலும் வாழ்வியலில் ஆங்கிலம் உள்ளதால் தாழ் நிலையில் கிடக்கும் தமிழர்கள் ஆங்கிலம் பேசினால்தான் மதிக்கப் படுவார்கள் என்பதைக் கூறும் வகையில்வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் பேசுஎன்றார். இன்றைக்குப் பள்ளிக் கூடங்களில்வீட்டில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்என்கின்றனர்.

             இன்று தமிழ்நாட்டில் பெரிய தனியார் நிறுவன அலுவலகங்களில், பேரங்காடிகளில், பெரிய உணவகங்களில், ஏன் முடி வெட்டும் கடைகளில் கூட உரிமையாளரோ மேலாளரோ  தமிழராக இருந்தாலும் வேலையாட்கள் வடநாட்டாராக இருப்பதால் ஆங்கிலத்தில்தான் நம்முடன் பேசுகின்றனர். பெரியார் சமயத்துறையில் உள்ள மூடநம்பிக்கைகளைக் களைய முற்பட்டதைப் போல, இந்திய அரசமைப்பில் இந்தியைத் திணித்ததை எதிர்த்தது போல, வாழ்வியலில் உள்ள ஆங்கிலமே உயரிய வாழ்வு என்னும் மூடநம்பிக்கையைக் களையவும் முற்பட்டிருக்க வேண்டும். இதனைச் செய்யாதது பெரியாரின் குறையே.

            சமற்கிருதத்தில் மந்திரம் கூறித் திருமணம் செய்யும் முறையைத் தூக்கியெறிந்துசுய மரியாதைத் திருமணம்என ஏற்படுத்தித் தமிழ்த் திருமணங்கள் நடக்க வழி செய்தார் பெரியார். அதனால்தான் மேடைத் தமிழ் வளர்ந்தது. பெரியார் நம் மொழி தமிழ் மொழிஎன்று கூறியவர். அவர் தமிழின் எதிரி இல்லை; மொழி பற்றி பழப் பெருமை பேசுவதையும், இழிவான (ஆபாச) புராணக் கதைகளையும்தான்  எதிர்த்தார். ஆயினும் தமிழில் வழிபாடு, தமிழிசை, தமிழ் வழிக் கல்வி, தமிழில் அறிவியல் நூல்கள் ஆகியவற்றுக்காகப்  பெரிதும் போராடினார்.

தமிழ் நாட்டுக்கு எதிரியா?
            தாம் கன்னடர் என்பதால் பெரியார் தமிழ் இன எதிரியாக இருந்தார் என்று குறை கூறுகின்றனர். பெரியார் பிறந்த சாதி என்பதால் அவ்வாறு கூறப்படுகின்றார். அவர் என்றுமே தன்னைக் கன்னடன் என்றோ கன்னட மொழி பேச வேண்டும் என்றோ கூறியவர் இல்லை. அவர் கன்னட நாட்டுக்காக உழைத்தவரும் இல்லை. தமிழராகத்தான் வாழ்ந்தார். சாகும் வரை தமிழ் படித்தார்; எளிய தமிழில் மேடையில் பேசினார்; தமிழ் மக்களுக்காகத், தமிழ் நாட்டுக்காகத், தமிழர் முன்னேற்றத்திற்காக உழைத்தார். தமிழ்நாட்டு நலம்தான் பேசினார்.

            காமராசர் முதலமைச்சரான போது, “இதுவரை தெலுங்கனும் பிறரும் ஆண்டனர்; இப்போதுதான் பச்சைத் தமிழன் ஆட்சி வந்துள்ளதுஎன்றார்.தமிழ்ப் பேராசிரியர்களை விட சமற்கிருதப் பேராசிரியர்களுக்கு அதிக ஊதியம் என்ற நிலை பற்றி அறிந்து சம ஊதியம் வழங்க வேண்டும் என்று (1920) போராடி வெற்றி பெற்றார்.

            தமிழர்களுக்கு மட்டுமில்லாது தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர், கன்னடர், யாராக இருந்தாலும் நம்மொழி தமிழ்தான் என்று கூறினார். மொழிவழி மாநிலம் வந்ததால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும் 1955- வாக்கில் ஒருங்கிணைந்த பழைய சென்னை மாநிலத்தை விட்டுப் பிரிந்து சென்றனர். அதனால், ‘திராவிட நாடு’,  ‘திராவிடத் தேசியம்’,  ‘தட்சிண பாரதம்என்பன அடிபட்டுப் போயின. எனவே, பெரியார் தம்விடுதலைஇதழின்  முதல்பக்கத்தில் முழக்கமாக இருந்ததிராவிட நாடு திராவிடருக்கேஎன்பதைத்  “தமிழ் நாடு தமிழருக்கேஎன்று  மாற்றினார்.

            ஈரோட்டில் பெரியாரின்குடியரசுஇதழைத் தொடங்கி வைத்தவர் தவத்திரு ஞானியாரடிகள் ஆவார். நாத்திகரான பெரியாரும் ஆத்திகரான ஞானியாரடிகளும் தமிழகம் முழுவதும் தமிழ் மொழி இனநலம்  பற்றி ஒரே மேடைகளில் முழங்கினர். ஞானியாரடிகளின் 60 ஆம் அகவை (வயது) நிறைவு விழாவின் போது கரந்தையில் பெரியார் ஞானியாரடிகளின் காலில் விழுந்து வணங்கியதால், எல்லோரும் விழுந்து வணங்கினர்;  “தமிழன் எவன் காலிலோ விழுவதற்கு இன்னொரு தமிழன் காலில் விழட்டும்என்றாராம்.

            பிறப்பால் சாதி கூறி மக்களைப் பிரிக்கும் வருணாசிரம முறையை  எதிர்க்கும் பெரியாரை  வேண்டுமென்றே பார்ப்பன இதழ்கள்.வே.ராமசாமி நாயக்கர்’  என்று சாதிப் பெயரைச் சேர்த்து எழுதின. இப்போது அவரைக் கன்னடத்து நாயக்கர் என்று குறிப்பதும் அத்தகையதே. தெலுங்குப் பார்ப்பனர் ஆகிய .மாதவையா தமிழ்க்கல்வி வேண்டும் என்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேசி வாதிட்டு  முடித்தபோது உயிர் நீத்தார்.  பெரியார் தம் வாழ்நாளின் இறுதிவரைத் தமிழகத் தமிழர்களுக்காகத்தான் வாழ்ந்தார்.

தமிழ் இனத்துக்கு இரண்டகமா?
            “எப்பொருள் எத்தன்மையாயினும்
            “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்
              பொருள் காண்பது அறிவுஎன்றார் வள்ளுவர். பெரியாரே ஆயினும் காந்தியடிகள், விவேகானந்தர், பாரதியார் என்று எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்களது கருத்துக்கள் திறனாய்வுக்கு உட்பட்டவையே! பெரியாருடைய எல்லாக் கருத்துக்களையும் எல்லாக் காலத்திலும் ஏற்க முடியாது.
           
            பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காத இறைப்பற்றாளர்கள் அவருடைய சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றார்கள். தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள் 5% தான்; மீதி 95%  கடவுள் பற்றாளர்களில் 90 விழுக்காட்டினராவது பெரியாரை  மதிப்பவர்கள்ஞானியார் அடிகள், மறைமலை அடிகளில் இருந்து அண்மைக்காலத்தில் வாழ்ந்த குன்றக்குடி அடிகளார் வரை ஏன்இன்றைய மதத் தலைவர்கள் வரை அனைவரும் பெரியாரை மதிப்பவர்களே!   அதைப்போல இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும்  பிற இன ஆதிக்க எதிர்ப்பாளர்களும் இந்தி (அரசு வல்லாண்மை எதிர்ப்பாளர்களும்  பெரியார் பாசறையில் உருவானவர்களே

            பார்ப்பனர்களின் சாதி மேலாதிக்கத்தையும்  தீண்டாமை வெறியையும் எதிர்த்த அவர், பார்ப்பனர்களையோ மற்ற சாதியினரையோ மதிப்புக் குறைவாக நடத்தியதில்லை. அதனால்தான் இராசாசி, கல்கி முதலிய பார்ப்பனர்கள்கூட  அவரை மதித்தனர்; பெரியார் மறைந்த போது, ஆனந்த விகடன் அவர்படத்தை அட்டையில் வெளியிட்டது.

            பெரியாரின் கடவுள் மறுப்பைப் பலர் ஏற்காதது போலப் பெண்ணியம் பற்றிய கருத்துக்களை முற்போக்குப் பெண்ணிய வாதிகளே ஏற்பதில்லை; அல்லது பின்பற்றுவதில்லை. எந்தக் கருத்தில் மாறுபட்டாலும் பெரியார் செய்த மக்கள் தொண்டைசமுதாயப் புரட்சியை நாம் மறுக்க முடியாது. சாதியக்  கொடுமைகள் நீங்கவும் கலப்பு மணம் கைம்பெண் மணம், தமிழ்முறைத் திருமணம் பெருகவும் பெண்கல்வி மிகவும், பெண்கள் சமத்துவம் பெறவும், ஏன் , ஆண்களே கூட  சாதி மதம்,பதவி, பணம் , நிறம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கிச் சமத்துவம் பெறவும் செய்தவர் பெரியார். பெரியாரின் இட ஒதுக்கீட்டுக்  கொள்கையால் தீண்டாமை ஒழிப்பால் முன்னேறியவர்களும் கல்வி அறிவும் பதவிகளும் பெற்றவர்கள்  தமிழ் மொழிக்கோ தம் சமுதாயத்துக்கோ கூட ஒன்றும் செய்யாமல், பெரியார் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று இழிவாகப் பேசுகிறார்கள்.

             அக்காலத்தில் உணவகங்களிலும், பள்ளிகளிலும், பள்ளி கல்லூரி விடுதிகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி, மற்ற சாதிக்காரர்களுக்கு தனிப் பந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி அல்லது வெளியில். தண்ணீர் குவளைகளில் தர மாட்டார்கள்; கையில் ஊற்றுவார்கள். சட்டை போடவோ செருப்பு அணியவோ கூட உரிமை இல்லாமல்  பெரும்பான்மை மக்கள் வாழ்ந்ததை மாற்றியவர் பெரியார். அவர்கள் பிராமணன் என்றால் மற்றவர்கள் சூத்திரர் (இழிந்தவர்) எனக் குறிக்கும். எனவே, ‘பிராமணாள் ஓட்டல்என்று எழுதியிருந்த பலகைகளை அவர் கருப்பு மை பூசி அழித்தார்.  பெரியாரின் இட ஒதுக்கீட்டுக்  கொள்கை இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் சட்டமாக்கப்பெற்று  பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பெற்றவர்களையும் முன்னேற்றியது;  வி.பி.சிங் முதன்மை அமைச்சராக இருந்த காலத்தில் (1990 ஆகத்து)   இந்திய அளவில் சட்டமாக்கப் பெற்றது.

            தேவிகுளம், பீர்மேடு பற்றிப் பெரியார் கவலைப்படவில்லை; ‘குளமாவது மேடாவது; எல்லாம் இந்தியாவுக்குள்தானே இருக்குஎன்றார் அப்போது முதலமைச்சராக இருந்த காமராசர். இந்திய இனம் என்று  நினைத்தது காமராசரின் தவறு; திராவிட இனம் என்று நினைத்தது பெரியாரின் தவறு  தேவிகுளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், பெங்களூர், மூணாறு முதலியவற்றை விட்டுக்கொடுப்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு  என்று பெரியாருக்கும் காமராசருக்கும் புலப்படாதது  பெருங்குறையே!

            மொழி வழிப் பிரிந்தாலும் இனவழிக் கூட்டாட்சி என்ற திராவிடக் கனவு இக்குறைக்குக் காரணம் என்பர். இது தவறு .   வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றாலும்  தென்னாட்டுப் பார்ப்பனரும் வடநாட்டுப்   ‘பணியா’ (வணிகர்) கும்பலும்  முழு விடுதலை பெற விட மாட்டார்கள் என்று மராட்டிய கோவிந்தராவ் புலே, அம்பேத்கார், பெரியார்  முதலியோர் கருதினர்.; 1955- வாக்கில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோது பெரியார், ‘தட்சிணப் பிரதேசம்எனப்பிரிந்தால் வடநாட்டுபணியா’ (வணிகர்) தென்னாட்டுப் பார்ப்பனர்  ஆகியோர் ஆதிக்கசெலுத்துவர் ; மேலும் மலையாளிகளும் தெலுங்கருமே பெரிய பதவிகளில் இருப்பர்; தமிழர்கள் கூலிகளாகத்தான் இருப்பர் - என்றார். பெரியார் தமிழ் நாட்டுக்கோ தமிழ் இனத்துக்கோ எந்த இரண்டகமும் செய்தவர் இல்லை. கன்னடர் தெலுங்கர் , மலையாளிகள் என்று அவர்களுடைய மொழி இன  நலத்துக்காகப்  பாடுபட்டவர் இல்லை.

            பெரியார் தமிழ் ஈழவிடுதலைக்குப் பாடுபடவில்லை என்று குறை கூறுவர். “நானே அடிமை, ஈழவிடுதலைக்கு எப்படி உதவமுடியும்?” என்றார். தமிழீழப் போராளிகளுக்கு உதவிய எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி பின்வாங்கினர்; அதற்குக் கரணியம் இந்திய அரசியல் (பார்ப்பன- பனியா) சட்டத்துக்கு உட்பட்டாக (அடிமையாக இருக்க) வேண்டிய நிலையே! கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டதும், பிந்தைய ஆட்சிக்காலத்தில் அஞ்சிப் பழியேற்றதும் நடந்த உண்மை. இப்போதும் இஅ விடுதலை, கச்சத்தீவு மீட்பு, மீனவர் காப்பு என செயலலிதா தீர்மானங்கள் நிறைவேற்ற முடிந்ததே தவிர தமிழக மீனவர்களைக் கூடக் காக்கமுடியவில்லை.

            மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தும், பொதுத்தொண்டில் யாவற்றையும் இழந்து, அரசியலால் தமக்குப் பணம் வந்தபோதும் எளிமையாய் கருமியிலும் கருமியாய் தமக்குரிய வசதிகளைத் துறந்து வாழ்ந்து பெரியார்  கொள்கை பரப்புவதற்காகச் சேர்த்த சொத்துக்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் தொழில் செய்து கோடிகோடியாகப்  பணம் பண்ணுகிற பிற இனத்தவர்கள் தத்தம் மாநிலத்துக்குக் கொண்டு போவது போலக் கொண்டு போகவில்லை. தமிழ் இனத்தவர் சிலரே கூட தமிழ் மொழிக்கோ தாம் பிறந்த தமிழ் மண்ணுக்கோ , தாழ்ந்து கிடக்கும் தம் சொந்தங்களுக்கோ கூட பயன்படுத்தாமல் வெளி மாநிலத்துக்கு வெளி நாட்டுக்குசுவிசுவங்கிக்குக் கொண்டு போவது போல் பெரியார் கொண்டு போகவில்லை!

            பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையும் சாதி மறுப்பும் பகுத்தறிவும் பரப்பிய நாத்திகர். அவருக்குச் சாதி, மதம், கடவுள் போல் மொழியும் ஒரு பொருட்டால்ல. ஆயினும் கடவுள் பெயரைச் சொல்லி சமற்கிருதத்தை உயர்த்தித் தமிழ் மொழியைத் தாழ்த்துவதையும், பார்ப்பனரை உயர்த்தி மற்ற மக்களைத் தாழ்த்துவதையும் எதிர்த்தார். அவர் தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடையே நிலவிய மத மூட நம்பிக்கைகளையும் சாதிச் சழக்குகளையும் தீண்டாமைக் கொடுமையையும் பெண்ணடிமையையும் போக்கப் போராடிய புரட்சியாளர். ‘திராவிடம்பற்றிய கருத்துகளையும் தமிழ்மொழி பற்றிய கருத்துகளையும் நாம் ஏற்கவில்லை என்றாலும்  அவருடைய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும்  அவற்றை நிலைநாட்ட அவர் உழைத்த பெரும் பணியையும் நாம் போற்றி மதிப்போம்!
                                              ( தமிழரங்கம் - காலாண்டு ஆய்விதழ், சனவரி,2014)
                                             ************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக