திங்கள், 2 நவம்பர், 2009

திருக்கடம்பூர்


தென்கடம்பைத் திருக்கரக்கோயிலான்

-முனைவர் பா.இறையரசன்

எல்லையில்லா ஆனந்தக் கூத்தாடும் தில்லை நடராசரின் கலைநயம் சேர்ந்த இயக்கமே

இவ்வுலகின் இயக்கம் என்பர். பதஞ்சலிமுனிவர் அருந்தவம் செய்ததால், தில்லையில்

நடம் புரிந்தார் அம்பலவாணர். நடராசரின் நடனம் மட்டுமல்லாது அவரைத் தலைமேல் வைத்துக்கொண்டு

ஆடும் பதஞ்சலி முனிவரையும், நர்த்தன விநாயகரையும், நடனமாடும் பாலசுப்பிரமணியரையும் காணவேண்டுமா?

மிக அழகான சோலைகள் வயல்கள் சூழ்ந்த சிற்றூர். தென்றல் வீசும் தெருக்கள். நடுவே கவின் மிகுந்த கலைக்கோயில். இந்தக் கோயிலைத் தன் தாய்க்காக எடுத்துச் செல்ல இந்திரன் முயன்றானாம். நான்கு சக்கரங்கள் அமைத்துக் குதிரைகள் பூட்டி ஓட்டிச் செல்ல முயல, விநாயகர் தம் காற்பெருவிரலால் அழுத்தித் தடுத்தாராம். அந்தக் கோயில் உள்ள ஊர்தான் திருக்கடம்பூர். இன்று மேலக்கடம்பூர் என்று வழங்குகிறது.

இந்திரன் தன் பிழையை உணர்ந்து வேண்டி, விநாயகர் அருளியபடி 'ருத்ரகோடீஸ்வரர்' என்னும் லிங்கத்தை அமைத்து வழிபட்ட கோயில்தான் கடம்பூர் இளங்கோயில். மேலக்கடம்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிற்பகுதி கீழக்கடம்பூர் என்று வழங்குகிறது.

தில்லை(சிதம்பரம்)க்கு எல்லை தாண்டித் தெற்கே 32 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார்கோயில்) என்னும் ஊருக்குத் தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவிலும் காவிரியின் வடகரையில் உள்ளது திருக்கடம்பூர். செட்டித்தாங்கல்-எய்யலூர் பேருந்துத் தடத்தில் மேலக்கடம்பூர் என்ற ஊர்தான் இது அப்பர்(திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார், பாம்பன் சுவாமிகள்,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுப் பாடிப்பரவியுள்ளனர்.
ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபட்டனர் என்பதை இங்கு சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கீழ் பொறித்துள்ளனர். திரேதாயுகத்தில் சூரியனும் சந்திரனும் ரோமைய முனிவரும் வழிபட்டுள்ளனர். துவாபர யுகத்தில் அஷ்ட பர்வதங்களும் பர்வதராஜனும் வழிபட்டுள்ளனர். இங்கு சனீஸ்வரன் கழுகு வாகனத்தில் காட்சிதருகிறார்;
இராமாவதார காலத்தில்தான் காக்கை சனீஸ்வரனின் வாகனமாயிற்று; எனவே அதற்கு முந்தைய பழமை வாய்ந்தது இக்கோயில் என்று கணிப்பர். மிகப்பழங்காலத்திலிருந்து விளங்கும் இக்கோயிலைப் பேரரசன் இராஜராஜனின் பேரன் முதலாம் குலோத்துங்கன் பெரிய கற்கோயிலாக கி.பி.1110-இல் எடுத்துக்கட்டினான். தேர் வடிவில் அமைந்த கரக்கோயில் என்னும் கட்டடக்கலை வடிவில் இக்கோயிலை அமைத்தான். கடம்பூர்க் கோயில் நான்கு
சக்கரங்களுடன் குதிரை பூட்டிய நிலையில் தேர்வடிவில் கிழக்கு நோக்கியதாக உள்ளது. ஹம்பி ரதமண்டபமும் தத்பரி (ஆந்திர மாநிலம்) கருடக்கோயிலும் தேர்வடிவின. சாமுண்டராயன் கட்டிய ஹரகுடி பாலேஸ்வரர் கோயில் குதிரை பூட்டிய தேர் வடிவில் உள்ளது. கடம்பூர்க் கோயில் இறைவன் மீது பங்குனி 3,4,5 நாள்களில் அதிகாலையில் சூரியனின் கதிர்கள் விழுகின்றன. சோழர்கள் காலத்தில்தான் நவக்கிரக வழிபாடும் குறிப்பாக சூரிய வழிபாடும் அதிக அள்வில் இடம் பெற்றன. குலோத்துங்கனின் உறவினன் கீழைக்கங்க அரசன் நரசிம்மன் ஒரிசாவில் 'கொனாரக்' என்னும் இடத்தில் கட்டியுள்ள சூரியன் கோயிலும் தேர் வடிவக் கோயில் ஆகும். கடம்பூர்க் கோயிலில் முதலாம் குலோத்துங்கனின் 43-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த 4 கல்வெட்டுகள் உள்ளன. தரையில் உள்ள கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'உத்தமசோழ சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர். இறைவியின் பெயர் சோதி மின்னம்மை. தலவிருட்சம்
கடம்பமரம். கடம்பவன நாதர், பாபஹரேஸ்வரர் முதலிய லிங்கங்களும் அமிர்தகடேஸ்வரரின் சுயம்பு லிங்கமும், அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், வீணா தெட்சிணாமூர்த்தி, ஆலிங்கனமூர்த்தி, பிட்சாடனர்,கங்காதரர் முதலிய சிவத் திருமேனிச் சிற்பங்கள் உள்ளன. சந்திரன், சூரியன், தேவேந்திரன், பர்வதராஜன்,பதஞ்சலி முனிவர், நர்த்தன கணபதி, கன்னி கணபதி, வன துர்க்கை, விஷ்ணு, பிரம்மா, யமன்,சித்திரகுப்தன்,பைரவர் முதலிய சிற்பங்களும் இருக்கின்றன.பெரியபுராண வரலாறுகளைக் கூறும் வரிச் சிற்பங்கள் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சண்டேஸ்வரர்,காரைக்காலம்மையார், கண்ணப்பர், தாடகை வரலாற்றுச் சிற்பங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வன. கருவறை வெளிச்சுற்றில் பரதநாட்டியச் சிற்பங்கள் விளங்குகின்றன. சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் திருமால் சிலையும் இருமருங்கும் அனுமன், கருடன் சிலைகளும் மட்டுமல்லாது, குடங்கை மேற்பகுதிகளில் கண்ணனின் லீலைகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் ஆலிங்கன மூர்த்தி, நடராஜர்,பிட்சாடனர்,ரிஷபவாகனர், நடன பாலசுப்பிரமணியர்,மாணிக்கவாசகர் முதலிய வெண்கலத் திருமேனிகள் விளங்குகின்றன. ரிஷப தாண்டவ மூர்த்தி என்னும் பால நடராஜர் ரிஷபத்தின் (நந்தியின்) மேல் நடம் புரிகிறார்; வீசிய பத்து கைகளிலும் கத்தி, சூலம்,தீச்சட்டி, கபாலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஆகியன உள்ளன. பக்கத்தில் பார்வதியும் சுற்றிலும் சிறு தெய்வங்களும் இருக்கின்றன. சிந்து சமவெளீயில் கிடைத்த, சுற்றிலும் விலங்குகள் சூழவுள்ள பசுபதி சிலையைப் போல் தோன்றுகிறது. இச்சிலையைக் குலோத்துங்கன் அவையில் ராஜ குருவாக விளங்கிய
கவுட(வங்க) தேசத்தவரான ஸ்ரீ கண்ட சிவன் இக்கோயிலுக்கு அளித்தார் என்று கூறுவர். முதலாம் இராசேந்திரன் வங்காளத்தை வென்று கொண்டு வந்தது என்றும் கூறுவர். இதே போன்ற சிலை டாக்கா அருங்காட்சியகத்திலும் உள்ளது என்று பி.ஆர்.சீனிவாசன் கூறுவார். வங்காளத்தில் பாலநடராஜர் சிலைகள் கிடைத்துள்ளன.

இத்தகு பெருமைகளுக்குரிய திருக்கடம்பூர் (மேலக்கடம்பூர்) திருக்கடையூருக்குச் சமமானதாகும்.

பாற்கடலில் கிடைத்த அமுதத்தைத் தேவர்கள் விநாயகரை வழிபடாமல் உண்ண முற்பட, அவர் அமுத குடத்தை ஒளித்துவைத்து, அவர்கள் உணர்ந்து வழிபட்டதும் கொடுத்தாராம். அவர் அமுத குடத்தை ஒளித்து வைத்த ஊர் திருக்கடையூர் (இன்று திருக்கடவூர் என்று வ்ழங்குகிறது). அந்தக் குடத்திலிருந்து ஒரு துளி அமுதம் சிந்தி சுயம்பு லிங்கம் தோன்றிய ஊர்தான் திருக்கடம்பூர். இரண்டு ஊர்களிலும் இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர். இறைவன் திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தியாகவும், திருக்கடம்பூரில் சாந்தமூர்த்தியாகவும் அருள் செய்கிறார். எனவே திருக்கடையூர் போலவே திருக்கடம்பூரிலும் மணிவிழா (சஷ்டியப்தபூர்த்தி) என்னும் அறுபதுக்கு அறுபது (அறுபதாம் கல்யாணம்) கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

அங்காரகன் திருமுருகனை வழிபட்டுத் தன் தோஷம் தீர்ந்தான்; எனவே அங்காரக தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெறுகின்றனர். கழுகு வாகனத்தில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டுப் பயன்பெறுகின்றனர். பிரதோஷ வழிபாட்டிற்கும் சிறப்பு மிகுந்த தலம் இது.

"தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என் கடன் பணி செய்து கிடப்பதே." (அப்பர்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக