சனி, 7 நவம்பர், 2009

ஆய்வுத்தலைப்புகள்

கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!

அன்பார்ந்த ஆய்வாளர்களே! வணக்கம். இவ்விதழ் ஆய்வியலை வளர்க்கத் தோன்றியதாகும். தமிழியலில் ஆய்வுத்துறை வளர்ந்து கொண்டே உள்ளது. அவ்வளர்ச்சி அவ்வப்போது தமிழியலார்க்குக் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்களுக்கு உரிய தரவுகளும் ஆவணங்களும் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்கள் எனும்போது ஆசிரியப் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் அடங்குவர்.

தமிழ் மொழிபற்றிய துறை தமிழ்த்துறை என்றில்லாமல் தமிழிலக்கியம் பற்றிய துறை என்பதான எண்ணம் வரக்காரணம் தனியே மொழியியல் என்ற துறை மிக விரைவாக வளர்ந்ததுதான். ஆனால் இதே போல வளர்ந்த இதழியல், சுற்றுலாவியல் முதலிய துறைகளும் தமிழோடு தொடர்புடையன என்பதைத் தமிழ்த்துறையினர் உணர்ந்ததால் தமிழியல் துறை ஆயிற்று.

தமிழ் படிக்கும் மாணவர்களும் தமிழ் ஆசிரியர்களும் இன்றைக்கு வளர்ந்துவரும் துறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியன், வ.அய். சுப்பிரமணியன், மா.நன்னன், க.ப.அறவாணன், பொற்கோ, வா.செ.குழந்தை சாமி முதலியோர் வலியுறுத்துவர்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் தரும். காதல் என்றும் பொருள் தரும். தமிழ் என்னும் சொல்லைத் தமிழ் மொழியைக் குறிக்கவும், தமிழ் நாட்டைக் குறிக்கவும், தமிழ் இனத்தைக் குறிக்கவும், சங்ககாலம் முதலே வழங்கி வருகின்றனர். எனவே தமிழியல் என்பதில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் என்பவை மட்டுமல்லாமல் தமிழ் மொழியையும் நாட்டையும் இனத்தையும் சார்ந்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இதழியல், மொழியியல், சுற்றுலாவியல், சமயவியல், மெய்மையியல், கலையியல், (ஓவியம், சிற்பம், கட்டடம், இசை, நாடகம், திரைப்படம் முதலியன) போன்ற அனைத்துமே உள்ளடக்கம்தான்.

தமிழில் நான்காம் தமிழாக அறிவியல் தமிழைச் சேர்க்க வேண்டும் என்று முனைவர் ந.சஞ்சீவி கூறினார். அறிவியல், அறவியல் என அனைத்தையும் இயல்தமிழ் கொண்டதுதான். இன்று வளர்ந்துவரும் கணிப்பொறியியலும் இதிலடங்கியதுதான். இத்துறையையும் உலகம் முழுவதும் வளர்த்து வருவது நம் தமிழ் இளைஞர்கள்தான். இணையத்திலும் ஆங்கில மொழியை அடுத்து தமிழே அதிக அளவில் இடம் பெற்றுவருகின்றது.

இவ்வாறு மிகவிரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற தமிழை – தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின் ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.

ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதே. ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தலைப்புகைளத் தொகுத்து முனைவர் தமிழண்ணல் ஓரு நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின் தலைப்புகளை இன்றுவரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் நிறைவில்லை என்பது உண்மை.

எனினும் முடிந்தவரை-மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்கள் தாங்களாக மனமுவந்து இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக் கடமையாகவும் தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கின்றோம்.

கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத் துறையிலிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு மடலைத்தான்.

முனைவர்.பா.இறையரசன். தி.ஆ.2036, ஆவணி (செப்தம்பர்,2005)
############################################################################
செப்தம்பர் 2009 -உம் கடந்தது. ஒரு சிலர் மட்டுமே விடை மடல் எழுதினர். தமிழர் நிலை இதுதான். பார்ப்போம். பார்ப்போம்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக