வியாழன், 21 ஜனவரி, 2010

பாரதியார்


பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் பாரதியார் விரும்பினார்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கை உடைய பாரதியார், இந்தியாவின் பல கோடி மக்களும் கடைக் கோடி ஏழையும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனப் பாடினார். அனைவருக்கும் விடுதலை, அனைவருக்கும் உணவு , ஆங்கோர் ஏழைக்கும் எழுத்தறிவு என அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பில்லாத சமுதாயம் காணப் பொதுவுடைமை வேண்டும் என்று பாரதியார் முழங்கினார்.
மெத்த வளரும் மேலை நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்ப்போம், நம் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தளித்துத் திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடச் செய்வோம் என்றார் பாரதியார்.
ஊசி செய்வது முதல் கப்பல் கட்டும் தொழில் வரை நம் நாட்டு இளைஞர்களைக் கற்கச் செய்வோம். ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி அ ..ஆ.. எனக் கற்பித்துத் தமிழ் படிக்கச் செய்வோம். வெற்றுப் பணக் கல்வியை விட தொழில் திறமையும் பண்பும் தரும் நாட்டுக்கல்வியே உயர்ந்தது என்பன பாரதியாரின் கொள்கைகள்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பரப்பிய பாரதியார், அதற்குக் கல்வியே உறுதுணை என்றார். பட்டங்கள் பெறுவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களை முழங்கவைத்தார்.
மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து, கடவுள் பக்தியுடன் உண்மையான ஆன்மிகத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற பாரதியார், வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்றார். எதிரிக்கும் இரக்கம் காட்டச் சொன்னவர், காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியதுடன் உலகுக்கே வழிகாட்டும் திறன் இந்தியாவிற்குத்தான் உண்டு என்று பாடினார். பாரதியார் கண்ட சமுதாயம் படைப்போம்.
**********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக