சனி, 23 ஜனவரி, 2010

சி.வை.தாமோதரர்


[Enter Post Title Here]


தமிழ்த் தாத்தாவுக்குத் தாத்தா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தமிழிலக்கியங்களைப் பனை ஓலைகளில் எழுதிப் பாதுகாத்து வைத்திருந்தனர் நம் முன்னோர். மேலை நாட்டார் வரவால் அச்சுக் கருவிகள் வந்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சில் தமிழ் இடம் பெற்றது. கிறித்துவ நூல்கள் தமிழில் அச்சிடப் பெற்றபோது சைவ சமய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சகம் தொடங்கினார். பதிப்புப் பணியில் அவரைப் பின்பற்றி உருவானவர்தான் சி.வை.தாமோதரம் பிள்ளை.

அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம்வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டிருந்தார். இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றி ஏடுகளைத்தேடிக் கண்டுபிடித்து அச்சில் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்களை வாழவைத்தார். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு முன்னோடி ஆவார்.


தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி

மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.


'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' -எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார். நீர்வாய்ப் பட்டும் , தீவாய்ப்பட்டும் , செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை , அரிதின் முயன்று தேடிப் பிடித்து அச்சிட்டுக் காத்தார் . சி . வை . தா . தமது இருபதாவது அகவையிலேயே ( வயதிலேயே ) ` நீதிநெறி விளக்கம் ' எனும் நூலை உரையுடன் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளிக்கொண்டுவந்தார் .


ஏடு பதிப்பிக்கும் இடர்

ஏட்டிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். தவறின்றி அச்சில் வெளியிடத் தனிப்புலமை வேண்டும். எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே துண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துகளோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் - பாணக்கலப்பை உழுது - இராமபாணம் என்னும் செல்லுப்பூச்சிகள் அரித்துக் கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளைப் பிரித்துப் படியெடுத்துச் , சொற்களைச் சரியாக அடையாளங் கண்டு, பதிப்பித்தார்.ஏடுகளைப் படித்து ஆராய்ந்து, பிழையின்றிப் படிஎடுக்கிறபோது சில ஐயங்கள் தோன்றிவிடும். அவற்றைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காததால் மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் .


தில்லைப் பார்ப்பனர்கள் தேவாரப்பாடல்களைப் பூட்டி வைத்துச் செல்லரிக்கவிட்டு எஞ்சியவற்றைப் போராடி மீட்டான் பேரரசன் இராசராச சோழன். தமிழ்ச் சங்கங்களையும் இழந்து, உலக அளவிலான மொழி இலக்கண நூல்களில் தொன்மையானதும் சிறப்பானதும் ஆகிய தொல்காப்பியத்தின் பொருளதிகார ஏட்டுச்சுவடிகளையும் இழந்து தவித்தான் பாண்டிய மன்னன். அந்தப் பொருளதிகாரத்தை மீட்டவர் சி.வை.தா.


'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகண்ட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' - எனத் தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார் சி.வை.தா.
தமிழ்த் தாத்தாவுக்குத் தந்தவர்

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். "பதிப்புத்துறைக்கு ஆறுமுக நாவலர் கால்கோள் நாட்டினார்; தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார்; உ.வே.சா. மேற்கூரை இட்டார் என்று திரு.வி.க. கூறுவார்.


தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம் , கலித்தொகை , இறையனார் அகப்பொருள் , இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும் , உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே . இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும் . இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன் ." என்று உ.வே . சாமிநாதையர் பாராட்டியுள்ளார் .


சீவக சிந்தாமணி நூலை உ . வே . சா . அவர்கள் 1887- இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார் . சிந்தாமணியை அச்சிடத் தாள் கிடைக்காமல் உ . வே . சா தவித்தபோது , சி . வை . தா . தமக்குத் தெரிந்த ஒரு தாள்வணிகர் மூலம் கடனில் பெற ஏற்பாடு செய்தார்
.

ஆசிரிய மாணவர்

பெர்சிவல் குருமாரிடம் ஆங்கிலக் கல்வி படித்து, அவருக்கே தமிழ் ஆசிரியரானவர் ஆறுமுக நாவலர். பெர்சிவல் அவரைக் கொண்டு தமிழில் விவிலியத்தை (பைபில்) வெளியிட்டார்; மேலும் சி.வை.தா., கறோல் விசுவநாதப்பிள்ளை ஆகியோர் உழைத்துச் செய்த ஆங்கிலம்- தமிழ் அகராதி, திருஷ்ட்டாந்த சங்கிரகம் ( 2000 ப்ழமொழிகளின் தொகுப்பு) ஆகியவற்றையும் வெளியிட்டார்.பின் சென்னைக்குக் குடியேறி, 'தினவர்த்தமானி' எனும் வாரஇதழை நடத்தி வந்தார். அவர் தாமோதரம்பிள்ளையைச் சென்னைக்கு அழைத்து இதழில் முதலில் துணை ஆசிரியர் பணியும் பின் ஆசிரியர் பணியும் அளித்தார். சி.வை.தா. ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். இதழ் ஆசிரியராகவும், கல்லூரித் தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய இளங்கலை (பி. ஏ.) தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.20ஆம் நூற்றாண்டைத் தொடங்கித் தான் முடிந்தவர்

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை (1896) ஆகிய இரண்டு நாடக நூல்களிலிருந்து ஐம்பது பக்கங்களைச் சென்னைப் பல்கலைக்கழக நுழைமுக (எப்.ஏ.) தேர்வுக்குப் பாடமாக வைப்பதற்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைத் தாமோதரம்பிள்ளை ஒப்புக் கொள்ளச் செய்தார். சென்னைப் பல்கலைக்கழகம் தற்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை .சி.வை.தா. சாப்பிட்டு முடிக்கும்போது இலையில் கடைசியாக மீந்து உள்ள ஊறுகாய் , உப்பு , சோறு , தொடுகறி எல்லாவற்றையும் ஒரு கவளமாக்கி விழுங்கி விடுவாராம்.அத்துடன் மிகுதியாக புகைத்து, அதனால்தான் செரிமானம் ஆகிறது என்பாராம். இத்தவறான கருத்து இருந்தாலும், . நீரிழிவு நோயாளியான சி . வை . தா . எழுபது அகவை வரை வாழ்ந்து தொல்காப்பியத்தையும் கலித்தொகையையும் அறிமுகம் செய்து , சங்கத்தமிழிலக்கிய தேடலைத் தொடங்கிவைத்து 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும் நாளில் ( 01 - 01 - 1901) தான் முடிந்தார் .88888888888888888888888888888888888888888888888888888

சி.வை.தாமோதரம் பிள்ளை

1.இயற்பெயர் . . . . . . . தாமோதரன்
2,சிறப்புப்பட்டம்.............. இராவ் பகதூர் (1895,ஆங்கில அரசு அளித்தது )
3. பெற்றோர் ..................... பெருந்தேவி அம்மாள், வைரவநாதப்பிள்ளை
4. பிறந்த நாள் .................. 12 - 09 - 1832.
5. மறைந்த நாள் ............ 01 - 01 - 1901.
6. ஊர் ......................... இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுபிட்டி
7. கல்வி ....................... வட்டுக்கோட்டை : பள்ளிக்கல்வி.
சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், கறோல் விசுவநாதப் பிள்ளை--ஆகியோரிடம் தமிழ்க் கல்வி.
யாழ்ப்பாணம்: செமினறி சாத்திரக் கலாசால
சென்னைப் பல்கலைக் கழகம்: நுழைமுகத் தேர்வு (1857),
இளங்கலை (1858) சட்டப்படிப்பு (1871)
8.பணி ........................... கோப்பாய்: போதனா சக்தி (ஆசிரியப் பயிற்சி)க்
கல்லூரி:ஆசிரியர்.(1852), சென்னை இராசதானி
(மாநில)க் கல்லூரி : தமிழாசிரியர்(1853- )
கள்ளிக்கோட்டை: அரசுக்கல்லூரி:தலைமை ஆசிரியர் (1858- )
சென்னை அரசு: வரவுசெலவுக் கணக்கு நிலையத் தலைவர்
கும்பகோணம் : வழக்குரைஞர் (1871- )
புதுக்கோட்டை: நீதிமன்றத் தலைவர் (1884- 1890)
இதழாசிரியர்: தினவர்த்தமானி (1853 - ), உதயதாரகை.
9. படைப்புகள் ............... கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம்,
நட்சத்திர மாலை, சூளாமணி வசனம்,
ஆதியாகம கீர்த்தனம், காந்தமலர் அல்லது
கற்பின் மாட்சி' (புதினம் :நாவல்),
சிறுவர்களுக்கான பாடநூல்கள்.
10. பதிப்பித்தவை ...... . நீதிநெறி விளக்கம் -உரையுடன்( 1853 )
தொல்காப்பியச் சொல்லதிகாரம்- சேனாவரையர் உரை ,
தொல்காப்பிய எழுத்திகாரம்- நச்சினார்க்கினியருரை
தொல்காப்பியப் பொருளதிகாரம்- நச்சினார்க்கினியருரை,
வீரசோழியம், திருத்தணிகைப் புராணம்,
இறையனார் அகப்பொருள், கலித்தொகை,
இலக்கண விளக்கம், சூளாமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக