புதன், 10 நவம்பர், 2010

கோண்டிமொழியும் மாவோயியமும்

நட்பு இணைய இதழில் வந்த திரு குணசேகரனின் கட்டுரையிலிருந்து : மாவோயிஸ்டுகளை பொறுத்தளவில் தவறானவர்களாகத் தெரியவில்லை. தவறான பாதையில் செல்பவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆளும், ஆளவரும், ஆளத்துடிக்கும் நம்மூர் அரசியல் இயக்கங்களை விட அவர்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் பொய்யான வாக்குறுதி எதையும் அளிப்பதில்லை. ஊழலில் திளைப்பதில்லை. ஏறெடுத்துப் பார்க்காத அரசு எந்திரங்களின் போக்கிலிருந்து மக்களைப் பார்ப்பதில் மாறுபட்டு நிற்பவர்கள். இன்னும் நிறைய கூறலாம். எனினும் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியே அவர்களின் சமூகப் பொறுப்பை மத்திய அரசே வெட்கப்படும்படி அமைந்துள்ளதை அறிந்தபோது, அணி சேராத இதழாளன் எனக்கு அவர்கள் மீது இன்னும் கூடுதலான மரியாதையை உருவாக்கியுள்ளது. ஆயுதந் தாங்கி போராடும் அவர்களின் வழிமுறைகளையும் தாண்டி சமூக பொறுப்புணர்வு மெச்சத்தக்கன. மாவோயிஸ்டுகள் கருவி தாங்கி அரசின் துணை இராணுவப் படைகளை அடிக்கடி எதிர்கொள்வது ஒருபுறம் நடந்தாலும், உள்துறை அமைச்சரே சுட்டிக்காட்டி பேசும் வகையில் அவர்கள் அரசுக் கட்டித் தந்த பள்ளிகளை இடிப்பது தொடர்பாக ஒரு தகவல் உண்டு. அவர்கள் பள்ளிக் கட்டிடங்களை தகர்ப்பது உண்மை. ஏனெனில், பயன்படாத ஒன்றைத் தாங்கள் தகர்ப்பதாகச் செய்திகள் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வாறுதான் அப்பள்ளிகள் பழங்குடி மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் உண்மை. அங்கு அரசு அமர்த்தும் ஆசிரியர்களுக்கு பழங்குடி மக்களின் மொழியில் பாடம் நடத்தத் தெரியவில்லை. அத்துடன் பள்ளிகளைக் காரணம் வைத்து வருகை தரும் அதிகாரிகளும் பழங்குடி மக்களை முகம் சுழித்து ஏளனப்படுத்துவதுபோல், பாராமுகம் காட்டுவது, அவர்களை, அவர்கள் மொழியை மதிப்பதில்லை என்பன போன்ற காரணங்களாலும், மேலும் பள்ளிக் கட்டிடத்தில் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தங்குவதற்குப் பயன்படுத்துவதாலும்தான் அதைத் தகர்ப்பதாகக் கூறுகின்றனர். இப்படித் தகர்ப்பதால் பழங்குடி மக்களின் பிள்ளைகள் கல்வி பாழாகாதா என்ற கேள்விக்கு மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர். பழங்குடிகளின் இளம் தலைமுறையினர்க்கு சிந்திக்கும் கல்வியை வழங்குவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். கல்வி வழங்குவதைக் கருவி தாங்கிய போருக்கிடையே உள்ள முக்கிய கடமை என்றும் கூறுகின்றனர். அதற்கேற்ப, சட்டீஸ்கர் வனப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பழங்குடி குழந்தைக்கும் கணிதம் – சமூக அறிவியல் – அரசியல் – பாடங்களை, கோண்டி மொழியில் தயாரான பள்ளிப் பாடநூல்களைத் தற்போது தருகின்றனர். கோண்டி மொழி என்பது தமிழ் மொழியின் கிளை மொழிகளில் ஒன்று என்பது இங்கு மிகமிக முக்கிய சேதியாகும். குறிப்பாக தமிழ் மொழிக் குடும்பத்தில் இருவகை பிரிவுண்டு. ஒன்று: இலக்கியம் படைக்கவும், இலக்கணமுள்ளதும், பேசவும் எழுதவுமான மேம்பட்ட மொழி. இரண்டு: வெறும் இனக் குழுக்களிடையே மட்டும் பேசவும், இலக்கியம் படைக்க திறனற்றதான மொழி. இந்த இரண்டு வகை மொழிக்கூட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு தனித்தனியே வரிவடிவம் அதாவது எழுத்துருக்கள் உண்டு. இலக்கணமும் உண்டு. இலக்கியங்களும் உண்டு. ஆனால் ஏனைய தமிழின் கிளை மொழிகளான தோடா, கோத்தர், படுகு, கேடகு, வர, கொலமி, நயினி, பருஹுய், பர்கி, ஒல்லரி, குய்ய, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குருக், மோஸ்ரா போன்றவற்றிற்கு பேச்சு வழக்கு உண்டே தவிர, இலக்கியப் படைப்பு இல்லை. எல்லாவற்றிலும் வாய்மொழி வழக்காறுகள் உண்டு. இதுபோன்ற கிளை மொழிகளை அவை பேசும் நிலத்தை வைத்து மொழியியலாளர்கள் வகைப்டுத்தியுள்ளனர். ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் தமிழ்மொழிக் குடும்பத்து ப்ருஹுய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், மத்திய இந்திய தமிழ்மொழிக் குடும்பத்திலுள்ளவை பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலியவை. தென்னிந்திய தமிழ் மொழிகளாக தோடா, கோத்தர், படுகு, கேடகு, வரகொலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. அதிலும் தமிழ்மொழிக் குடும்பத்தின் தொன்மையான தாய்மொழியான தமிழ் தன் கிளை மொழிகளான, அதாவது சேய் மொழியான பழங்குடி மொழி ஒன்று இத்தனை நாட்கள் இலக்கியம் படைக்க இயலாத அதன் நிலையில் மாற்றம் கண்டதென்பது பழங்குடி மொழியின் எழுச்சியாகத்தான் கருத வேண்டும். இதனால் தமிழரும் பெருமை கொள்வர். தமிழ்மொழி இயல் அறிஞர்கள் உட்பட, ஆய்வாளர்கள் அனைவரும் பேருவகைக் கொள்ளத்தக்க செயல் இது. தற்போது புத்துயிர் பெற்றுள்ள தமிழ்க் கிளைமொழியாம் கோண்டியில் அடிப்படைக் கல்வி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பழங்குடி குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொழியை அறியவும் அதனைப் பயன்படுத்தி சிந்திக்கவும் ஏராளமான கதை, வரலாறு, கலை, பண்பாடு, உயிரியல் போன்ற முக்கியப் பிரிவுகளில் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போதுள்ள எண்மின் அசைவுபடகுலுவூட்டி குறும்படங்கள் எனவும் காட்சிப் படங்களைத் தயாரித்துள்ளனராம். ஒன்று முதல் ஐந்து வரை கோண்டி மொழி கற்பித்தல் மொழி. சட்டீஸ்கரி, கோர்கு, ஹலபி, துர்குகா போன்ற இதர மத்திய இந்திய சிறுபான்மை பழங்குடி மொழி பேசும் குழந்தைகள் உட்பட தொடக்கக்கல்வி மொழியான கோண்டியில்தான் படிக்க வேண்டும். பின்னரே உயர்நிலை அறிவியல் எதிர்காலத்தை உணர்த்தும் விதமான பாடங்களை ஆறு முதல் பத்து வரை இந்தியில் கற்கவும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்
http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/mavoist.php

வியாழன், 14 அக்டோபர், 2010

காலத்தை வென்றவர்களின் காலத்தை மறக்கலாமா?

தெளிதமிழ் இதழில் தி.ஆ. 2041, கன்னி, 1 (17-09-2010) திரு.அகமுடை நம்பியின் கட்டுரை கண்டேன். தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் காலக் கணிப்பு செய்ய வேண்டியது கட்டாயமாகும் ஆனால் போதுமான தரவுகள் சான்றுகள் இல்லாததால் பலவற்றை நாம் முடிவு செய்யமுடியவில்லை . தமிழர்களுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது இருந்தாலும் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டியது நம் கடமை தான். வாழ்க்கை வரலாற்றை எழுதுவதும் நாட்குறிப்பு எழுதுவதும் நம்முடைய வழக்கம் இல்லை கொடை நிலைக்க வேண்டும் என்பதற்காக கல்வெட்டில் பதிந்தது நமக்கு ஓரளவு உதவியாக உள்ளது. உலகம் முழுவதும் தொன்மையான பழங்கால வரலாற்றில் தரவுகள் குறைவுதான். கிடைக்கும் சான்றுகளை முதலில் அடித்தளமாக கொண்டு முன்னும் பின்னும் காலக்கட்டங்களை நிறுவுவது வழக்கம். புராண இலக்கிய செவிவழி செய்திகளையும் நார்போல் கொண்டு கட்டுவது வழக்கம். வரலாறும் கூட ஒருவகையில் புனைகதைதான் . கிறித்து பிறந்த ஆண்டு நாள் இவை கூட இத்தகைய கட்டுமானத்தில் பிறந்ததுதான். இதனை அடிப்படையாக்க் கொண்டு இன்றைக்கு உலக வரலாறு நின்று கொண்டு இருக்கிறது. பிற்காலத்தில் இந்தியாவில் பின்பற்றப்பட்ட சாலிவாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, பசளி ஆண்டு இவையெல்லாம் சரிவர அமையாதவை. 60 ஆண்டு பற்சக்கர முறை இன்னும் தெளிவு இல்லாதது. பல்லவர் காலத்தில் இருந்து நமக்கு கல்வெட்டுகளும் செப்பெடுகளும் நிறைய கிடைப்பதால் முன்னும் பின்னும் காலக்கணிப்பை நம்மால் செய்யமுடிகிறது. சங்ககாலத்திய கல்வெட்டுகளும் இப்போது கிடைக்கின்றன . இந்திய வரலாற்றிலும் குப்தர் மோரியர் காலங்கள் ஒரளவுக்கு கனிக்கப்பட்ட பிறகு பிறகாலங்கள் முன் பின்னாக கோத்து அமைக்கப்பட்டன. பாணினி காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு என்று உறுதி செய்யப்பட்ட்தை வைத்து தொல்காப்பியர் காலம் அதற்கு முந்தையது என்று வரையறை செய்தார்கள். திருவள்ளுவர் காலத்தை சென்னையில் மறைமலை அடிகள், திரு.வி.க, சோம சுந்தர பாரதியார், கா.நமசிவாய முதலியார் முதலிய பேரறிஞர்கள் கூடி முடிவு செய்தார்கள். இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஊக்கமும் மக்கள் எழுச்சியும் ஏற்படுவதற்காக பிள்ளையார் விழா, காளிவிழா முதலியவற்றை தேசிய விழாவாக இந்தியா முழுவதும் பரப்பினர். அதே போலத் தமிழர்களுடைய தொன்மையான இலக்கியத்தைச் செய்த திருவள்ளுவர்க்கு விழா கொண்டாடுவதும், பொங்கல் திருநாளை தமிழர் திருநாள் என்று கொண்டாடுவதும் ஊக்கம் தந்தன. அதே நேரத்தில் காலக்கணிப்பு செய்வதும் நமக்கு கட்டாயம் அல்லவா? கடவுள் ஆகிய இராமருக்கும் , கிருட்டிணருக்கும் பிறந்த நாள் கொண்டாடுகிற போது, தெய்வப் புலவர் திருவள்ளுவருக்குக் கொண்டாடுவது தவறா? இராமர் பிறந்தது 17 இலட்சம் ஆண்டுகள் முன் என்று அவர்கள் கூறும் போது, நம் நாட்டுப் பேரறிஞர்கள் திருவள்ளுவர் பிறந்ததுகிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன் என்று வரையறை செய்தது தவறா? திருவள்ளுவருடைய உருவச் சிலை மயிலை திருவள்ளுவர் கோயிலில் உள்ளது. சிவமதமாக அடையாளம் காட்டப்பட்டிருப்பதால் அவ்வடையாளம் நீக்கிய திருவள்ளுவர் உருவத்தை வரைந்தனர். தமிழக அரசு சார்பில் இன்னும் சிறிது மெருகேற்றி வரையப்பட்டது. அண்மைக் காலத்துப் பாரதியாருடைய உருவமே பல வகையாக வரையப்படவில்லையா? எனவே மக்களிடம் தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரை அடையாளம் காட்ட படங்களும் உருவச் சிலைகளும் தேவைதான். திருவள்ளுவரும் தொல்காப்பியரும் தாம் பிறந்த நாளை கொண்டாடச் சொன்னார்களா? என்று கட்டுரை ஆசிரியர் அகமுடை நம்பி எழுதி உள்ளார். பிள்ளையாரோ இராமரோ தாம் பிறந்த நாளைக் கொண்டாடச் சொன்னார்களா? பிறந்த குழந்தைக்குப் பெயரிடு விழாவும் பிறந்த நாள் விழாவும் கொண்டாடுகிறோமே, அந்தக் குழந்தை நம்மிடம் கொண்டாடக் கட்டாயப்படுத்தியதா? நம்முடைய மகிழ்ச்சிக்காகவும் ஒற்றுமைக்காகவும் நாம் கொண்டாடுகிறோம். ஆகவே தமிழருடைய இன ஒற்றுமை எழுச்சிக்கும் ஊக்கத்துக்கும் பிறந்த நாள் விழாக்கள் உதவுகின்றன. காலக்கணிப்பு வரலாற்றுக்கட்டுமானத்திற்கு உதவுகிறது. - முனைவர். பா.இறையரசன்

வியாழன், 8 ஏப்ரல், 2010

கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை



கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும்
தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்கஇலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக,
தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர். உரைகளும் கூடஅவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக, ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத்தராமல்வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம் நடத்துவார். இலக்கியங்களை
மட்டுமல்லாமல் இலக்கணங்களையும் சுவையுடன் நடத்துவார். இத்தகு
பெருமைக்குரியவர்தான் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில்,1886ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
தஞ்சை தூயபேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ்இலக்கியத்தை கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல்
ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார்.
தமிழவேளின் நண்பரும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான கரந்தைக் கவியரசுவேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.
"கரந்தை" என்பது கருந்திட்டைக்குடியின் மரூஉ. மொழிப்பெயர் கரந்தை என்ற பூவின்பெயர். புறத்திணை அடிப்படையில் மீட்டலைக் குறிக்கும். தமிழின் பெருமையையும்வளர்ச்சியையும் மீட்கும் பணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே தம் வாழ்வாகக்கொண்டு உழைத்தவர் கவியரசு. சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய"தமிழ்ப்பொழில்" ஆசிரியராகவும் இரவு பகல் பாராமல் பாடுபட்டவர்.கவியரசு வேங்கடாசலம், கரந்தையில் குடியிருந்தார். நண்பர் ஒருவர், "சாகை கரந்தையில் தானே?'' என்று கேட்டார். சாகை என்ற சொல் (ஜாகை) குடியிருப்பதைக்குறிக்கும், தமிழில் "சாதல்" என்ற பொருளும் தரும். ஆதலால், "ஆம்..ஆம்.. சாகைகரந்தையில்தான்'' என்றார் கவியரசு. சாகை என்றது சாகும்போதும் தமிழ் படித்துச்
சாகும் வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குத் தொண்டு செய்து வாழ்வேன் என்ற
பொருளில் நகைச்சுவையுடன் கூறினார் எனில், அவர் தமிழ்ப் பற்றை என்னவென்பது?இலக்கணம் என்றாலே பிலாக்கணம் என்று அஞ்சி ஓடினாராம் பாரதியார். இலக்கணம்என்றால் பலாச்சுளை என்று எடுத்துத் தேனில் ய்த்து அளித்தார் கவியரசு.குற்றியலுகரம் என்பது ஒற்றுமை நயம்; உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.
புதுக்கோட்டை மன்னர், பார்ப்பனர்களுக்கு இலவச வேட்டி சேலை அளித்தார். அதை வாங்கபார்ப்பனப் பெண் மகனுடன் தொடர்வண்டியில் சென்றார். ஆய்வாளர் வந்து சீட்டுக் கேட்டபொழுது, மடியில் மகனை வைத்துக்கொண்டு, "நான் மட்டும் தான், மடியில்இருப்பது சிறுகுழந்தை'' என்றார். அரண்மனையில் பார்ப்பனப் பெண் தனக்குப்புடவையும் தன் குழந்தைக்குத் தனியே சிற்றாடையும், கருவுற்றிருக்கிற தன் வயிற்றைக் காட்டி இன்னொரு சிற்றாடையும் என மூன்று கொடை வாங்கினார். அவர் போட்ட
கணக்கு முதலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகியது! பின் ஒவ்வொன்றாக மூன்று ஆகியது!தனக்கும் குழந்தைக்கும் ஒரு சீட்டு என்பது ஒற்றுமை நயம். மூன்று கொடை வாங்கியது வேற்றுமை நயம் என்றார் கவியரசு. இப்படிப் பாடம் நடத்தினால் இலக்கணம் கசக்குமா?

இன்னொரு நிகழ்ச்சி. உ.வே.சா. ஒரு முறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். ந.மு.வே.நாட்டாரும் கவியரசும் சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தனர்.கவியரசின் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் அப்போது உடன் இருந்தனர். தேள் கொட்டியதால் மருந்துண்டு தேறிய நண்பர் ஒருவர், "கடித்த வாய்தான் கடுக்கிறது'' என்றார். "கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே?'' என்று தமிழவேள் கேட்டார். தமிழ்த்தாத்தா கவியரசரைப் பார்த்தார். கவியரசு தம்
மாணவரைப் பார்த்து, "நீர் சொல்லும்'' என்று தலையாட்டினார். ஒளவை
துரைசாமிப்பிள்ளை, "கடி என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினை
ஆயிற்று. கடுத்தது காட்டும் முகம் போல்'' என்று கூறினார். தமிழ்த்தாத்தா உடனே, "கவியரசரிடம் இலக்கணம் கற்றவர் என்று நிறுவினீர்கள். எடுத்துக்காட்டுகளுடன் இனிமையான இலக்கணம் கற்பிப்பவர் என்றால் கவியரசுதான்'' என்று பாராட்டினார்.
மேலும், "சீவகசிந்தாமணியை நான் பதிப்பித்தபோது பொறாமையால் பலர் குறை கூறி எழுதினார்கள். ஆனால், உண்மையிலேயே திருத்தங்களை எடுத்துக்காட்டிப் "பெயர் விழையான்" என்ற புனைப்பெயரில் கவியரசு மடல் அனுப்பியிருந்தார். என்னையே திருத்திய பெரும்புலவர் என்ற புகழ் வேண்டாமென்று தன்னடக்கத்தால் பெயர் எழுதவில்லை'' என்று பலவாறு பாராட்டினார் உ.வே.சா.

தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். தமிழவேள்
உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச்சங்க இதழும் கல்லூரியும் தனித்தமிழில் ஊற்றங்கொள்ளக் கவியரசின் எழுத்தும் பேச்சும் தூண்டல் ஆகும். பா.வே.மாணிக்கநாயக்கரும் தனித்தமிழ் பரப்பி வந்தார்.
"பிரேரேபிக்கிறேன்" போய் "முன்மொழிகிறேன்" என்றும், "தீர்மானம்" போய் "முடிவு" என்றும் வந்தன. "போஜனம் ஆயிற்றா! எனக் கேட்பது தமிழ் மரபு'' என்று எழுதிய உ.வே.சா. தமிழ்ப்பொழிலின் எழுத்துத் தாக்குதலுக்கு ஆளானார். "உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார்
யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்'' என்று "தமிழ்ப் பொழில்" இதழில் கவியரசு எழுதினார்.
ஆங்கிலக் கல்வியால் தமிழ்க் குழந்தைகள் சீர்கெடுகின்றன. இதை,
"ஐந்துவயதிலிருந்தே தங்கு தடையின்றிப் பேசக்கற்றிருந்த தாய்மொழியில் இப்போது பேசுவதற்குத் தம்மால் இயலாது என்கின்றனரே! ஆங்கிலம் படித்த வாழ்வுதான் என்னே!'' என்று வருந்தி எழுதியுள்ளார்.
கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில்
பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ்
அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.
திருவையாறு கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர், "செந்தமிழ் என்று இக்காலத்தில் கூறுவதால் முக்காலத்தில் கொடுந்தமிழாக இருந்ததுபோலும்''
என்று பேசினார். உடனே அதை மறுத்து, "செஞ்ஞாயிறு இருந்தது என்றால் கருஞாயிறு இருந்தது என்று ஆகுமா? செந்தமிழ் என்றும் செந்தமிழ்தான்; செம்மொழிதான்'' என்று முழங்கியவர் கவியரசு வேங்கடாசலம்.
- ஆசான் ஆற்றுப்படை (தூயபேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா  என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது)
- மொழி அரசி - மணிமேகலை நாடகம் - செந்தமிழ்க் கட்டுரைகள் (தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரைகள்) என்ற நூல்களையும்,
- அகநானூறு உரை - வேங்கட விளக்கு போன்ற உரை நூல்களையும் படைத்துள்ளார். ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.இலக்கண, இலக்கியங்களில் துறைபோகியவரும், சிறந்த மாணவர்களை உருவாக்கியவரும், தமிழுக்குப் பெருமை சேர்த்தவருமான கவியரசர், 1953ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். கரந்தை என்று கூறினாலே கவியரசரின் பெயரும் அவரது தமிழ்த்தொண்டும் தான்அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
--- முனைவர் பா.இறையரசன்
நன்றி:- தினமணி-தமிழ்மணி-04-04-2010

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தாய்த் தமிழின் எழுச்சி காண்போம் !: காவிரித்தாய் அழியும் நிலை ! நாமோ நல்லுறக்கத்தில் !

தாய்த் தமிழின் எழுச்சி காண்போம் !: காவிரித்தாய் அழியும் நிலை ! நாமோ நல்லுறக்கத்தில் !

தமிழின் எழுச்சி-1


செம்மொழிச் செம்மல்கள் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார் செம்மல் (கோவிந்தன்)

வணக்கம். '"தமிழைத் தமிழாக்குவோம்" திட்டங்கள் : 1.நேரில் கூடிப் பேசலாம். 2. திட்ட வரையறை தேவை. 3. முதலில் தமிழ்மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவன பற்றி மட்டுமே எடுத்துக் கொள்வோம். 4. நன்னன் ஐயாவின் வழியில் - வழிகாட்டுதலில் - தமிழ் மொழி வழக்கில் - பேச்சு வழக்கில் - எழுத்து வழக்கில் அன்றாடம் காணும் பிழைகளைக் களையும் கருத்துக்களைப் பரப்புவோம். 5. தமிழ்வழிக்கல்வி பற்றிய கருத்துப் பரப்பலையும் மேற்கொள்ளலாம். என் வலைப் பூ, ஆய்வுத் தமிழ் குழு ஆகியவற்றைக் காண்க! அன்பிலே,
முனைவர் பா.இறையரசன் 9840416727
***********************************************************************************************************************************************************************************************************

தமிழின் எழுச்சி என்ற வலைப் பூவில் அதன் ஆசிரியர் கோவிந்த கண்ணன் கட்டுரை -1

இன்றைய சூழலில் என்ன இது தமிழின் எழுச்சி காண்போம் என்கிறாரே என்ற ஐயம் ஏற்படுவது

இயல்புதானே! வெளிப்பகையாலும் உட்பகையாலும் தாய்த் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அச்சம்

கொள்ள வைக்கிறதே!
என் செய்வது ? இதற்கு விடைதான் வலைப்பூவின் தலைப்பு !


வெளிப்பகை :
ஆப்பிரிக்காவுக்கும், பிரிட்டிஷ் கயானவுக்கும் , அடிமைகளாக அனுப்பப்பட்ட தமிழர் இன்று தம் இன

அடையாளம் இழந்ததை மறக்க முடியாது. பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட தமிழர் நிலையும்

அவ்வண்ணமே! மற்றும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழரை அழித்தொழித்து, பிஞ்சுக்
குழந்தைகளும், பெண்டிரும்,முதிர்வடைந்தோரையும் பாகுபாடின்றி கன- ரக ஆயுதங்களைக்கொண்டு

சென்ற ஆண்டு பொசுக்கி மகிழ்ந்தனரே ! சாஸ்திரி - சிறிமாவோ இணைந்து இலங்கைத்

தேயிலைத்தோட்ட தமிழ்த் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பினார்களே ! பம்பாயிலிருந்தும்,

அருகிலே பங்களுருவிலிருந்தும் தமிழர்கள் உதைத்து விரட்டப்பட்டார்களே !

உட்பகை :

உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக,

இல்லை இல்லை ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும்

தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதிப் பிற உட்பகை

பற்றி கூறாது விடுகிறேன். பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ? "தமிழினி மெல்லச்சாகும்

என்றவன் பேதை!" என்றானே மீசைக் கவி ? அவன் கூறி 80 - ஆண்டுகள் சென்றும் பாரதி

சொன்னது உண்மைதானே ! இன்னும் சாகவில்லையே ! ஏன் ? தமிழின் வலிமைதான் காரணம் ஆகும்.

தமிழ் நாட்டு வரலாறு மறைக்கப்படும் அவலம் :

தமிழ் நாட்டுவரலாறு நம் தமிழர் உலகின் தொல்குடியாய் இருந்தும் நம் பள்ளிகளிலும், ஏன்

கல்லூரிகளின் வரலாற்றுப் பட்டப்படிப்பிலும் கூட ( சில பல்கலைக்கழகங்கள் தவிர) மறுக்கப்படும்-

மறைக்கப்படும்- அவலநிலை இன்றும் நீடிக்கிறது.

சனி, 23 ஜனவரி, 2010

சி.வை.தாமோதரர்


[Enter Post Title Here]


தமிழ்த் தாத்தாவுக்குத் தாத்தா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தமிழிலக்கியங்களைப் பனை ஓலைகளில் எழுதிப் பாதுகாத்து வைத்திருந்தனர் நம் முன்னோர். மேலை நாட்டார் வரவால் அச்சுக் கருவிகள் வந்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சில் தமிழ் இடம் பெற்றது. கிறித்துவ நூல்கள் தமிழில் அச்சிடப் பெற்றபோது சைவ சமய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சகம் தொடங்கினார். பதிப்புப் பணியில் அவரைப் பின்பற்றி உருவானவர்தான் சி.வை.தாமோதரம் பிள்ளை.

அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம்வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டிருந்தார். இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றி ஏடுகளைத்தேடிக் கண்டுபிடித்து அச்சில் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்களை வாழவைத்தார். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு முன்னோடி ஆவார்.


தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி

மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.


'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' -எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார். நீர்வாய்ப் பட்டும் , தீவாய்ப்பட்டும் , செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை , அரிதின் முயன்று தேடிப் பிடித்து அச்சிட்டுக் காத்தார் . சி . வை . தா . தமது இருபதாவது அகவையிலேயே ( வயதிலேயே ) ` நீதிநெறி விளக்கம் ' எனும் நூலை உரையுடன் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளிக்கொண்டுவந்தார் .


ஏடு பதிப்பிக்கும் இடர்

ஏட்டிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். தவறின்றி அச்சில் வெளியிடத் தனிப்புலமை வேண்டும். எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே துண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துகளோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் - பாணக்கலப்பை உழுது - இராமபாணம் என்னும் செல்லுப்பூச்சிகள் அரித்துக் கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளைப் பிரித்துப் படியெடுத்துச் , சொற்களைச் சரியாக அடையாளங் கண்டு, பதிப்பித்தார்.ஏடுகளைப் படித்து ஆராய்ந்து, பிழையின்றிப் படிஎடுக்கிறபோது சில ஐயங்கள் தோன்றிவிடும். அவற்றைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காததால் மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் .


தில்லைப் பார்ப்பனர்கள் தேவாரப்பாடல்களைப் பூட்டி வைத்துச் செல்லரிக்கவிட்டு எஞ்சியவற்றைப் போராடி மீட்டான் பேரரசன் இராசராச சோழன். தமிழ்ச் சங்கங்களையும் இழந்து, உலக அளவிலான மொழி இலக்கண நூல்களில் தொன்மையானதும் சிறப்பானதும் ஆகிய தொல்காப்பியத்தின் பொருளதிகார ஏட்டுச்சுவடிகளையும் இழந்து தவித்தான் பாண்டிய மன்னன். அந்தப் பொருளதிகாரத்தை மீட்டவர் சி.வை.தா.


'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகண்ட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' - எனத் தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார் சி.வை.தா.




தமிழ்த் தாத்தாவுக்குத் தந்தவர்

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். "பதிப்புத்துறைக்கு ஆறுமுக நாவலர் கால்கோள் நாட்டினார்; தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார்; உ.வே.சா. மேற்கூரை இட்டார் என்று திரு.வி.க. கூறுவார்.


தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம் , கலித்தொகை , இறையனார் அகப்பொருள் , இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும் , உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே . இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும் . இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன் ." என்று உ.வே . சாமிநாதையர் பாராட்டியுள்ளார் .


சீவக சிந்தாமணி நூலை உ . வே . சா . அவர்கள் 1887- இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார் . சிந்தாமணியை அச்சிடத் தாள் கிடைக்காமல் உ . வே . சா தவித்தபோது , சி . வை . தா . தமக்குத் தெரிந்த ஒரு தாள்வணிகர் மூலம் கடனில் பெற ஏற்பாடு செய்தார்
.

ஆசிரிய மாணவர்

பெர்சிவல் குருமாரிடம் ஆங்கிலக் கல்வி படித்து, அவருக்கே தமிழ் ஆசிரியரானவர் ஆறுமுக நாவலர். பெர்சிவல் அவரைக் கொண்டு தமிழில் விவிலியத்தை (பைபில்) வெளியிட்டார்; மேலும் சி.வை.தா., கறோல் விசுவநாதப்பிள்ளை ஆகியோர் உழைத்துச் செய்த ஆங்கிலம்- தமிழ் அகராதி, திருஷ்ட்டாந்த சங்கிரகம் ( 2000 ப்ழமொழிகளின் தொகுப்பு) ஆகியவற்றையும் வெளியிட்டார்.பின் சென்னைக்குக் குடியேறி, 'தினவர்த்தமானி' எனும் வாரஇதழை நடத்தி வந்தார். அவர் தாமோதரம்பிள்ளையைச் சென்னைக்கு அழைத்து இதழில் முதலில் துணை ஆசிரியர் பணியும் பின் ஆசிரியர் பணியும் அளித்தார். சி.வை.தா. ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். இதழ் ஆசிரியராகவும், கல்லூரித் தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய இளங்கலை (பி. ஏ.) தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.



20ஆம் நூற்றாண்டைத் தொடங்கித் தான் முடிந்தவர்

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை (1896) ஆகிய இரண்டு நாடக நூல்களிலிருந்து ஐம்பது பக்கங்களைச் சென்னைப் பல்கலைக்கழக நுழைமுக (எப்.ஏ.) தேர்வுக்குப் பாடமாக வைப்பதற்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைத் தாமோதரம்பிள்ளை ஒப்புக் கொள்ளச் செய்தார். சென்னைப் பல்கலைக்கழகம் தற்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை .சி.வை.தா. சாப்பிட்டு முடிக்கும்போது இலையில் கடைசியாக மீந்து உள்ள ஊறுகாய் , உப்பு , சோறு , தொடுகறி எல்லாவற்றையும் ஒரு கவளமாக்கி விழுங்கி விடுவாராம்.அத்துடன் மிகுதியாக புகைத்து, அதனால்தான் செரிமானம் ஆகிறது என்பாராம். இத்தவறான கருத்து இருந்தாலும், . நீரிழிவு நோயாளியான சி . வை . தா . எழுபது அகவை வரை வாழ்ந்து தொல்காப்பியத்தையும் கலித்தொகையையும் அறிமுகம் செய்து , சங்கத்தமிழிலக்கிய தேடலைத் தொடங்கிவைத்து 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும் நாளில் ( 01 - 01 - 1901) தான் முடிந்தார் .



88888888888888888888888888888888888888888888888888888









சி.வை.தாமோதரம் பிள்ளை

1.இயற்பெயர் . . . . . . . தாமோதரன்
2,சிறப்புப்பட்டம்.............. இராவ் பகதூர் (1895,ஆங்கில அரசு அளித்தது )
3. பெற்றோர் ..................... பெருந்தேவி அம்மாள், வைரவநாதப்பிள்ளை
4. பிறந்த நாள் .................. 12 - 09 - 1832.
5. மறைந்த நாள் ............ 01 - 01 - 1901.
6. ஊர் ......................... இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுபிட்டி
7. கல்வி ....................... வட்டுக்கோட்டை : பள்ளிக்கல்வி.
சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், கறோல் விசுவநாதப் பிள்ளை--ஆகியோரிடம் தமிழ்க் கல்வி.
யாழ்ப்பாணம்: செமினறி சாத்திரக் கலாசால
சென்னைப் பல்கலைக் கழகம்: நுழைமுகத் தேர்வு (1857),
இளங்கலை (1858) சட்டப்படிப்பு (1871)
8.பணி ........................... கோப்பாய்: போதனா சக்தி (ஆசிரியப் பயிற்சி)க்
கல்லூரி:ஆசிரியர்.(1852), சென்னை இராசதானி
(மாநில)க் கல்லூரி : தமிழாசிரியர்(1853- )
கள்ளிக்கோட்டை: அரசுக்கல்லூரி:தலைமை ஆசிரியர் (1858- )
சென்னை அரசு: வரவுசெலவுக் கணக்கு நிலையத் தலைவர்
கும்பகோணம் : வழக்குரைஞர் (1871- )
புதுக்கோட்டை: நீதிமன்றத் தலைவர் (1884- 1890)
இதழாசிரியர்: தினவர்த்தமானி (1853 - ), உதயதாரகை.
9. படைப்புகள் ............... கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம்,
நட்சத்திர மாலை, சூளாமணி வசனம்,
ஆதியாகம கீர்த்தனம், காந்தமலர் அல்லது
கற்பின் மாட்சி' (புதினம் :நாவல்),
சிறுவர்களுக்கான பாடநூல்கள்.
10. பதிப்பித்தவை ...... . நீதிநெறி விளக்கம் -உரையுடன்( 1853 )
தொல்காப்பியச் சொல்லதிகாரம்- சேனாவரையர் உரை ,
தொல்காப்பிய எழுத்திகாரம்- நச்சினார்க்கினியருரை
தொல்காப்பியப் பொருளதிகாரம்- நச்சினார்க்கினியருரை,
வீரசோழியம், திருத்தணிகைப் புராணம்,
இறையனார் அகப்பொருள், கலித்தொகை,
இலக்கண விளக்கம், சூளாமணி.

வியாழன், 21 ஜனவரி, 2010

பாரதியார்


பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் பாரதியார் விரும்பினார்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கை உடைய பாரதியார், இந்தியாவின் பல கோடி மக்களும் கடைக் கோடி ஏழையும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனப் பாடினார். அனைவருக்கும் விடுதலை, அனைவருக்கும் உணவு , ஆங்கோர் ஏழைக்கும் எழுத்தறிவு என அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பில்லாத சமுதாயம் காணப் பொதுவுடைமை வேண்டும் என்று பாரதியார் முழங்கினார்.
மெத்த வளரும் மேலை நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்ப்போம், நம் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தளித்துத் திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடச் செய்வோம் என்றார் பாரதியார்.
ஊசி செய்வது முதல் கப்பல் கட்டும் தொழில் வரை நம் நாட்டு இளைஞர்களைக் கற்கச் செய்வோம். ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி அ ..ஆ.. எனக் கற்பித்துத் தமிழ் படிக்கச் செய்வோம். வெற்றுப் பணக் கல்வியை விட தொழில் திறமையும் பண்பும் தரும் நாட்டுக்கல்வியே உயர்ந்தது என்பன பாரதியாரின் கொள்கைகள்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பரப்பிய பாரதியார், அதற்குக் கல்வியே உறுதுணை என்றார். பட்டங்கள் பெறுவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களை முழங்கவைத்தார்.
மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து, கடவுள் பக்தியுடன் உண்மையான ஆன்மிகத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற பாரதியார், வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்றார். எதிரிக்கும் இரக்கம் காட்டச் சொன்னவர், காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியதுடன் உலகுக்கே வழிகாட்டும் திறன் இந்தியாவிற்குத்தான் உண்டு என்று பாடினார். பாரதியார் கண்ட சமுதாயம் படைப்போம்.
**********************************************